10 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 21இற்கு மேற்பட்ட டி20இல் பங்கேற்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் 2024 ஆம் ஆண்டுக்கான எதிர்கால போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுடன் இலங்கை அணி அடுத்த ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது. இதில் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்குகின்றன.
சிம்பாப்வே மற்றும் ஆப்கான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு பின்னர் இலங்கை அணி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதற்காக பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2024 ஜூன்–ஜூலையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.
எதிர்கால போட்டி அட்டவணையின்படி இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளன. 2024 ஜூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.
இதனையடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடுவதற்காக இலங்கை அணி ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
2024 செப்டெம்பர் மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்து அணி இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடும்.
ஆண்டிறுதியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் ஈடுபடவுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதோடு 2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரியில் நியூசிலாந்து செல்லும் இலங்கை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடும்.
இதன்படி அடுத்த ஆண்டில் இலங்கை அணி மொத்தமாக 10 டெஸ்ட், 21 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் தவிர்த்து 21 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இந்தியாவில் அண்மையில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி சோபிக்கத் தவறிய நிலையிலேயே அடுத்த ஆண்டை எதிர்கொள்ளவுள்ளது. தவிர, இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் தடை விதித்திருந்தபோதும் அது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.