Tuesday, April 30, 2024
Home » உலகின் பொருளாதார பலம் மிகுந்த நாடாக வேகமாக வளர்ந்து வரும் சவூதி அரேபியா

உலகின் பொருளாதார பலம் மிகுந்த நாடாக வேகமாக வளர்ந்து வரும் சவூதி அரேபியா

- சவூதி அரேபிய ஆய்வுகளுக்கான ஆர்வலர் கலாநிதி அம்ஜத் ராஸிக் விளக்குகிறார்

by Rizwan Segu Mohideen
November 27, 2023 8:37 am 0 comment

உலகளவில் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், முன்னேறிவரும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து உலகில் பலம் பொருந்திய பொருளாதார நாடாக சவூதி அரேபியா திகழ்ந்து வருவதாக சவூதி அரேபிய ஆய்வுகளுக்கான ஆர்வலர் கலாநிதி அம்ஜத் ராஸிக் கூறுகின்றார்.

தினகரனுக்கு அவர் வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: சவூதி அரேபியாவின் பொருளாதாரம் உலகளவில் எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பதனை விளக்க முடியுமா?

பதில்: உலகிலேயே 17 ஆவது சக்திவாய்ந்த போட்டித்திறன்மிக்க பொருளாதாரமாக சவூதி அரேபியாவின் பொருளாதாரம் காணப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட சுவிற்சர்லாந்தினை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச முகாமைத்துவ மேம்பாட்டுக்கான ஆய்வுமையத்தின் (IMD) வருடாந்த சர்வதேச வரிசைப்படுத்தலுக்கான அறிக்கையில் போட்டித்திறன்மிக்க பொருளாதார பலத்தினை உடைய 64 முதல்தர நாடுகளுக்கு மதியில் 17 ஆவது இடத்தினை சவூதி அரேபியா இவ்வருடம் 2023 இல் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையை சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரும் பிரதம மந்திரியுமான முஹம்மத் பின் சல்மான் ‘பொக்ஸ் நியூஸ்’ இற்கான நேர்காணலில் தெரிவித்திருந்தார். “இன்று 17 ஆவது சக்திவாய்ந்த பொருளாதாரமாக இருக்கும் சவூதி அரேபியாவின் பொருளாதாரம் விரைவில் உலகிலேயே முதல் 7 ஏழு ஸ்தானங்களுக்குள் இடம்பிடிக்கும்” எனவும் அவர் உறுதியுடன் குறிப்பிட்டிருந்தார். G20 இல் முதலாவது இடத்தினை சவூதி அரேபியா 2022 இல் பிடித்ததனை அவர் விஷேடமாகக் குறிப்பிட்டார். அதேவேளை சர்வதேச நாணய நிதியமும் சென்ற செப்டம்பரில் வெளியிட்ட ஒரு ஆய்வில் சவூதி அரேபியாவின் பொருளாதாரம் சென்ற நான்கு வருடங்களில் பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதனை புள்ளிவிபரங்களுடன் பதிவுசெய்துள்ளது.

கே: சவூதி அரேபியாவின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்ட காரணிகள் இவை?

ப: சவூதி அரேபியாவை இதுவரை நல்லாட்சி புரியும் ஆட்சியின் ஸ்திரத்தன்மை இதற்கான முக்கிய விடயம். முதலில் 1932 காலப்பகுதியில் சவுதியை ஸ்தாபித்த மன்னர் அப்துல் அஸீஸ், அன்றைய உலக வல்லரசுகளுடன் கைகோர்த்து பல துறைசார் நிபுணர்களின் ஆலோசைனைக்கமைய தனது நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்டார்.

அதன் பின்னர் பெற்றோலிய உற்பத்தி சவுதியின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றங்களைப் பதித்தது. இன்று அந்த நாடு பெற்றோலிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அதன் உற்பத்தியின் அனைத்து பொறிமுறைகளையும் தேசிய மனித வளங்களைக் கொண்டு மாத்திரம் மேற்கொள்ளும் அளவுக்கு பரிணமித்துள்ளது. அந்நாட்டு அரசின் நல்ல பொருளாதாரக் கொள்கைகளே இதற்கான காரணங்கள்.

கே: சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சியின் பயணத்தை எவ்வாறு நோக்கலாம்?

ப: சுமார் 80 ஆண்டுகளுக்குள் பொருளாதார ரீதியாக பலமான ஒரு நிலையினை தொடர்ந்தும் பேணிவரும் சவூதி அரேபிய அரசு அதற்கென்று பல திட்டங்களைக் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பெற்றோலிய உற்பத்தியில் ஆரம்பத்தில் மேற்கத்திய வல்லரசு நாடுகளுடன் கைகோர்த்து பெற்றோலிய அகழ்வுகளை ஆரம்பித்த சவூதி, இன்று தேசிய மனிதவளங்களை மேம்படுத்தி பிறநாட்டு தலையீடுகளின்றி தனது உற்பத்திகளை பாதுகாக்கும் ஒரு பொருளாதார திட்டத்தில் வெற்றிகண்டுள்ளது.

மேலும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வரும் யாத்திரிகர்கள் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தில் பங்களிப்பினை வழங்கும் அதேவேளை, அந்த யாத்திரிகர்களுக்கான வசதிவாய்ப்புகளை அந்நாடு திறம்பட மேற்கொண்டு வருகிறது. பெற்றோலியத்தினை மாத்திரம் தங்கியிருக்காது பல்துறை தேசிய உற்பத்திகளில் தன்னிறைவுபெற்று பொருளாதார அபிவிருத்தியில் வெற்றிகொள்வது என்பது முக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது.

கே: தற்போதைய சவுதிய பொருளாத அபிவிருத்தியின் பாரிய திட்டங்கள் பற்றி?

ப: தற்பொழுது சவூதி அரேபியா பாரிய பொருளாதார திட்டங்களை வகுத்து பல மைற்கற்கள் கடந்து சென்று பயணிக்கின்றது. குறிப்பாக இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் பாரிய திட்டங்கள் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

கே: சவூதியின் பொருளாதாரத்தின் பலத்தினை எடுத்துக்காட்டும் தரவுகள் எதாவது உள்ளனவா?

ப: சவுதியின் அந்நிய செலாவணி கையிருப்பு இவ்வருட ஆரம்பத்தில் 453.4 பில்லியன் அ. டொலர்களாகும். உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகள் இவ்வருட ஆரம்பத்தில் 9.9% வீதத்தினால் அதிகரித்து 1.885 ட்ரில்லியன் ரியால்களை (502.7) அ. ​ெடாலர்களை எட்டியுள்ளது. வெளிநாட்டு வர்த்தக வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிக வருவாயாக 73.7 பில்லியன் ரியால் இவ்வருட முதல் ஆறுமாதங்களில் மாத்திரம் பதிவாகியுள்ளது. இவ்வாறு கணக்கீடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கே: சவுதியின் பொருளாதாரத் திட்டங்களிலிருந்து இலங்கை எவ்வாறு பயனடைய முடியும்?

ப: ஒரு பலம்பொருந்திய பொருளாதாரக் கொள்கையினை உடைய நாடு என்ற வகையில் சவுதியுடனான பொருளாதார உடன்படிக்கைகளில் கவனம் செலுத்துவது சாலச் சிறந்தது என்பதனை பொருளாதார விற்பன்னர்களே கூறுவர். இதில் மாற்றுக்கருத்தில்லை.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT