Saturday, April 27, 2024
Home » அபூதாபி ரி10 தொடரில் இருந்து இலங்கையின் 4 வீரர்கள் விலகல்

அபூதாபி ரி10 தொடரில் இருந்து இலங்கையின் 4 வீரர்கள் விலகல்

by sachintha
November 24, 2023 9:17 am 0 comment

எதிர்வரும் அபூதாபி ரி10 தொடரில் இருந்து இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண விலகியுள்ளார். அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள அந்தத் தொடரில் பதிரண பங்களா டைகர்ஸ் அணிக்காக ஆடவிருந்தபோதும் உலகக் கிண்ணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை.

பதிரண தவிர, இலங்கை அணியின் சக வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, துஷ்மன்த சமீர மற்றும் டில்ஷான் மதுஷங்கவும் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தொடரை தவிர்த்துள்ளனர்.

பதிரண போன்று குமாரவும் தமது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாதிருப்பதோடு சமீரவுடன் கடந்த உலகக் கிண்ணத்தில் சோபித்த மதுஷங்கவை தொடரில் இருந்து விலகும்படி இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று 2023 பருவத்தின் அபூதாபி ரி10 தொடரில் நோர்தன் வொரியர்ஸ் அணிக்கு தலைமை வகிக்க எதிர்பார்த்திருந்த இலங்கை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் அண்மையில் இங்கிலாந்தில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் 2023 பருவத்தின்போது தொடைப் பகுதியில் காயத்திற்கு உள்ளான ஹசரங்க இலங்கையில் நடந்த ஆசிய கிண்ணத் தொடர் மற்றும் இந்தியாவில் அண்மையில் நிறைவடைந்த உலகக் கிண்ணத்தில் இருந்து விலகினார்.

அபூதாபி ரி10 தொடர் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏழாவது முறையாக நடைபெறும் இந்த லீக் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளதோடு அனைத்து போட்டிகளும் அபூதாபியின் ஷெய்க் சயித் கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் இலங்கையின் 10க்கும் அதிகமான வீரர்கள் விளையாடவுள்ளனர். இதில் ஆடுவதற்கு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல, வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உபாதை காரணமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் தசுன் ஷானக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நிரோஷன் திக்வெல்ல நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காகவும், பினுர பெர்னாண்டோ டீம் அபூதாபி அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT