Sunday, April 28, 2024
Home » மன்னார் பறவைகள் கழகம் ஏற்பாடு செய்துள்ள முதலாவது பொதுநிகழ்வு

மன்னார் பறவைகள் கழகம் ஏற்பாடு செய்துள்ள முதலாவது பொதுநிகழ்வு

by sachintha
November 24, 2023 11:32 am 0 comment

அங்கத்துவம் பெற பெயரைப் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

மன்னார் பறவைகள் கழகம் (MBC) தனது முதலாவது பொதுநிகழ்வை மன்னாரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 9.30 மணி வரை மன்னார்_ -தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில் பறவைகளைப் பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து காலை 10 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மன்னார் தேசிய இளைஞர் படை பயிற்சி நிலையத்தில் பறவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வில் அனைவரும் வருகை தந்து சிறப்பித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளின் இலங்கைக்கான நுழைவாயிலாகவும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற பறவைகள் அதிகம் காணப்படும் இடமாகவும் மன்னார் மாவட்டம் திகழ்கின்றது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிய கருமுதுகுக் கடற்காக்கை (Heuglin’s gull)மன்னாரில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் குறியிடப்பட்டு,’மேகா’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அது உயர்ந்த இனப்பெருக்கம் செய்யும் தனது இடமான ஆர்ட்டிக்கிலிருந்து அதிசயிக்கத்தக்க வகையில் மூன்றாவது தடவையாக இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் குறியிடப்பட்ட நாளிலிருந்து இதுவரை மேகா 65,000 கி.மீ வரை பயணித்துள்ளது.

“இதுபோன்ற தனிச்சிறப்பான அம்சங்களைக் கொண்ட பறவைகளின் சரித்திரத்தை அறியவும், கொண்டாடவும் எங்களுடன் இணையுங்கள். மேலும் இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மன்னார் பறவைகள் கழகத்தின்(MBC) 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அங்கத்துவத்தை இலவசமாக வழங்க உள்ளமையால் இந்நிகழ்வில் உங்கள் பெயர்களை பதிவு செய்ய, உங்கள் பெயர் மற்றும் பணிபுரியும் நிறுவனம், பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை என்பவற்றை ‘வட்ஸ்அப்’ செயலியினூடகக் குறுந்தகவலாக அனுப்பி வையுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக விபரங்கள் அறிவதற்கு டிலக்சன் (076-1265041), லஹிரு (071-4562948) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்…

(மன்னார் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT