Sunday, April 28, 2024
Home » ஆரோக்கிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவும் SCREENING TEST விசேட பரிசோதனைத் திட்டம்

ஆரோக்கிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவும் SCREENING TEST விசேட பரிசோதனைத் திட்டம்

by damith
November 14, 2023 12:40 pm 0 comment

மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஆரோக்கியத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருதமுனை பிரதேச வைத்திய அதிகாரி (பிரதேச வைத்தியசாலை) டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ழார்.

இன்றைய நவீன உலகில் மக்கள் பலர் தொற்றாநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கான தீர்வைக் காணக்கூடிய விதத்தில் உலக சுகாதார அமைப்பு பல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதார வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘ஆய்வுகூட பரிசோதனைகளும் உடற் பரிசோதனைகளும்’ (SCREENING TEST) எனும் பரிசோதனைத் திட்டம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு பரிசோதனை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களை மையமாகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருதமுனை பிரதேச வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ழார் விளக்கமளிக்கையில், “ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இத்திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென்பதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். அந்த வகையில், எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமான சந்ததியினராக கட்டியெழுப்புவதற்காக, இன்றைய சமுதாயம் ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பதற்காக வழிகாட்டல்களை நாம் வழங்க வேண்டும். பழக்கவழக்கத்தில் ஒவ்வொரு தனிநபரும் மாற்றத்தினை கொண்டு வரவேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனக் கேட்டுக் கொண்டார்.

“இத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு பிரிவுக்கு ஒரு குழு எனும் அடிப்படையில் 8 குழுக்களை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு குழுவிலும் பலதரப்பட்ட பதவிநிலையில் உள்ளவர்களையும், அத்தோடு சாதாரண வேலை செய்யும் பொதுமக்களில் ஒருவரையும் இணைத்து ‘சுகாதார சேவைகளுக்கான நண்பர்கள் குழு” (FHS) எனும் பெயரில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று குருதி ஆய்வுகளும் ஆரோக்கிய விழிப்பூட்டல் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளை பிரதேச வைத்தியசாலையான மருதமுனை வைத்தியசாலையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வாராவாரம் விழிப்பூட்டல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 25 சதவீதமானோருக்கு இப்பரிசோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டப் பரிசோதனைக்கான உதவிகள் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நாங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை மேற்கொண்டு, இத்திட்டத்தில் அவர்களை உள்வாங்கி விழிப்பூட்டல்களும் வழங்கி வருகின்றோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியமாகும்.

சாதாரணமாக 35 வயதிற்கு மேற்பட்டோரையும் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் உள்ள 22 வயதிற்கு மேற்பட்ட இளவயதினரையும் உடல், உள ஆரோக்கியத்தில் அதிக தேவையுடையோரும் இப்பரிசோதனைக்கு உள்வாங்கியுள்ளோம்.

இப்பரிசோதனையில் குருதிப் பரிசோதனை, சிறுநீரகத்தின் நிலையை பரிசோதித்தல், பார்வை, கேட்டல், மார்பகம், வாய், கர்ப்பப்பை வாசல், உயர் இரத்த அழுத்தம், நிறை, உயரம், இடுப்பு சுற்றளவு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குருதிப் பரிசோதனை மூலம் நீரிழிவு நோய், தைரோயிட், கொலஸ்ரோல் போன்றன பரிசோதிக்கப்படுகின்றன.

அது மட்டுமன்றி ஒவ்வொருவரையும் தனித்தனியே சோதனைக்குட்படுத்தி அவர்களின் உளப்பிரச்சினைகள், போதைப் பழக்கம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்குவதோடு உளவியல் ரீதியான தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. வாரந்தோறும் உணவுப்பழக்கவழக்கம், மனிதன் வாழ அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், சுவாசம், உணவு, உடற்பயிற்சி, தூக்கம் போன்ற விடயங்களில் போதியளவு கவனம் செலுத்துதல் பற்றிய ஆழமான வழிகாட்டல்களும் குழந்தை வளர்ப்பு வாழ்க்கை நடைமுறை பற்றியும் அறிவூட்டல் வழங்கி வருகின்றோம்” என டொக்டர் மிஹ்ழார் தெரிவித்தார்.

நிஸா இஸ்மாயீல்   Dip.in journalism (SEUSL)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT