Sunday, May 12, 2024
Home » சதித்திட்டங்களின் விளைவே இலங்கை கிரிக்கெட் நிலைமைக்கு காரணம்

சதித்திட்டங்களின் விளைவே இலங்கை கிரிக்கெட் நிலைமைக்கு காரணம்

- நிறுவன தெரிவுக்குழு தலைவர் தெரிவிப்பு

by Prashahini
November 14, 2023 2:38 pm 0 comment

நீண்ட காலமாக பல்வேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட சதித்திட்டங்களின் விளைவாகவே இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு தற்போதைய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற சண்டையிடுபவர்களும் ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள தரகர்களும் தேசிய அணியில் தமது இடத்தை உறுதிசெய்ய போராடுபவர்களும் இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் சமூக ஊடகங்களை தமது வழிமுறையாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய நோக்கங்களுக்காக தேசிய அணியின் இருப்பை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கான பின்புலம் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் நியமனத்தின் பின்னரே ஏற்படுத்தப்பட்டதாக, இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவிற்கு முன்னைய விளையாட்டுத்துறை அமைச்சர்களின் ஆதரவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 5 வருடங்களில் நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தரக்கூடிய அணியைத் தயார்ப்படுத்துவதே தெரிவுக் குழுவின் முயற்சியாக இருந்ததாகவும் அதற்காக அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சும் அதனை நிராகரித்ததாகவும் பிரமோத்ய விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் தீர்மானங்களை, அமைச்சின் கீழ் இயங்கிய குழு அங்கீகரிப்பதில்லை என சமூக ஊடகங்களில் அவர்கள் வௌியிடும் கருத்துகளின் ஊடாக வெளிப்பட்டுள்ளதாகவும் இதனூடாக தெரிவுக்குழு தொடர்பில் சமூகத்தில் காணப்பட்ட நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட வீரர்களை அணிக்குள் உள்வாங்காமையை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இவ்வாறு தெரிவுக்குழுவை விமர்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடர்பில் வெளியிடப்பட்ட குசல சரோஜினி அறிக்கையின் மூலம் தெரிவுக்குழு கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் இரண்டாவது அழுத்தம் பாராளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகவும் பிரமோத்ய விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

தனிநபர்களின் குறுகிய இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தெரிவுக்குழு பலியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் எழுச்சி அல்லது வீழ்ச்சியைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பமே தற்போது உருவாகியுள்ளதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே தற்போதைய தேவையாகும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT