Saturday, April 27, 2024
Home » அரச ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை

அரச ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை

- அரச பொதுச் சேவைகள் சங்கம் தெரிவிப்பு

by Prashahini
November 14, 2023 11:23 am 0 comment

ரூ. 20,000 சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்து கொண்டிருந்த அரச ஊழியர்களுக்கு ரூ.10,000 சம்பளம் அதிகரிப்பை அதுவும் தவணை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளமையானது யானைப் பசிக்கு சோள பொரி போட்ட கதையாகும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது ஜே பி மற்றும் நிதிச் செயலாளர் க.நடராஜா ஆகியோர் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளின் பிரகாரம் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவானது ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.

ஜனவரி ,பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான இக்கொடுப்பனவு தவணை அடிப்படையில் வழங்கப்படள்ளமையானது ஒரு ஏமாற்று வித்தை ஆகும்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதே நிதி அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளை வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார்

இருந்தபோதும் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதிக்கால பகுதியும் நிறைவடையும் தருவாயில் அடுத்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து மீண்டும் ஒரு மாயாஜால குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

ஏப்ரல் முதல் ரூ. 10,000 சம்பளம் அதிகரிப்பு வழங்கப்படும் என்று மார்ச் மாதம் தேர்தலை எதிர்பார்த்திருக்கின்ற இந்த அரசாங்கம் ஏப்ரலில் அதிகரித்த சம்பளத்தை வழங்கப் போவதாக கூறுவதை நம்பி ஏமாந்து போவதற்கு இனியும் அரச ஊழியர்கள் தயாராக இல்லை. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவை போன்ற ஒரு ஏமாற்று வித்தையா என்று சந்தேகிக்க தோன்றுகின்றது.

இன்று நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. வாழ்க்கைச் செலவு மலைபோல் உயர்ந்துள்ளது. இதுவரை காலமும் விதவைகள், அனாதைகள் ஓய்வூதிய திட்டத்திற்காக அரச ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமாக அறவிடப்பட்ட பங்களிப்பு தொகையை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளமை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கின்ற செயலாகும்.

இந்த நிலையில் ரூ.10,000 வாழ்க்கைச் செலவு படியாக அதிகரித்து விடுவதன் மூலம் அரசு ஊழியர்களை நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலிருந்து வெளியேற்ற முடியாது. இந்த சம்பள உயர்ச்சி வாழ்வாதார பிரச்சினையிலிருந்து சிக்கித் தவிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு போதும் நிவாரணமாக அமையப் போவதில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்து, மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பொருளாதார ரீதியாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்காத வரை சம்பள உயர்வு அர்த்தமற்றதாகிறது.

எனவே தான் தற்போது விடுத்துள்ள ரூ. 10,000 சம்பள அதிகரிப்பு முன்மொழிவுக்கு மேலதிகமாக அரச உத்தியோகத்தர்களுக்கு, தற்போதைய விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு சுட்டெண் கணிப்பிடப்பட்டு அதன் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஈடுகொடுக்கும் வகையில் வாழ்க்கைச் செலவு படியையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

துறைநீலாவணை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT