Tuesday, April 30, 2024
Home » காசா போருக்கு ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

காசா போருக்கு ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

காசாவை அப்பாஸிடம் கொடுக்க பேச்சு

by mahesh
November 8, 2023 6:46 am 0 comment

காசா மற்றும் இஸ்ரேல் போர் வெடித்து நேற்றுடன் ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் இடைவிடாது நீடித்து வருவதோடு போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

காசாவில் உயிரிழப்பு 10,000ஐ தாண்டி இருப்பதோடு காசா நகரை சுற்றிவளைத்ததாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் வளாகம் ஒன்றையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. எனினும் நிலத்தடி சுரங்கப்பதைகளில் இருந்து பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து இஸ்ரேலிய படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

தெற்கு காசா நகரங்களான கான் யூனிஸ் மற்றும் ரபா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரித்துள்ளது.

வடக்கு காசாவிலும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் அங்குள்ள மக்கள் தெற்கை நோக்கி சலாஹ் அல் தீன் பாதை வழியாக பயணிக்க இஸ்ரேல் இராணுவம் நேற்று நான்கு மணி நேரம் அவகாசம் வழங்கி இருந்தது.

காசாவில் இதுவரை 12,000க்கும் அதிமான இலக்குகள் மீது வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. தரைவழி துருப்புகளை அனுப்பியிருக்கும் இஸ்ரேல் காசா பகுதியை இரண்டாக பிரித்திருப்பதாகவும் காசா நகரை சுற்றிவளைத்ததாகவும் கூறியது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1400 பேரை கொன்று 240 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றது தொடக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் நிறுத்தத்திற்கான அழைப்பு அதிகரித்தபோதும் அதற்கான சாதகமான நிலைப்பாடு வெளியாகவில்லை. போர் நிறுத்தத்திற்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கூறும் அதே நேரம் காசா தாக்குதலுக்கு இலக்காகும் நிலையில் அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று ஹமாஸ் கூறுகிறது.

போர் நிறுத்தம் இஸ்ரேலின் போர் நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் அமெரிக்கா ஆதரிக்கும் மனிதாபிமான காரணத்திற்கான போர் நிறுத்தம், சூழலுக்கேற்ப முன்னெடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“மூலோபாய ரீதியில் அங்கும் இங்கும் போர் நிறுத்தங்களை நாம் முன்னெடுப்பதோடு நாம் இதனை முன்னரும் செய்துள்ளோம். மனிதாபிமான உதவிகள் வருவதற்கு அல்லது எமது பணயக்கைதிகள், தனிப்பட்ட பணயக்கைதிகள் வெளியேறுவதற்கான சூழலை நாம் சரிபார்க்கிறோம்” என்று ஏ.பி.சி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். இஸ்ரேலுக்கு நாம் ஆதரவு அளிக்கும் அதே நேரம் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைப் போன்றே போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று அமெரிக்காவும் அச்சத்தை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், காசா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருவதாக தெரிவித்தார்.

“இஸ்ரேலிய படை தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வதோடு பொதுமக்கள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் முகாம்கள் உட்பட ஐ.நா நிலைகள் மீதும் தாக்குகிறது. யாரும் பாதுகாப்பாக இல்லை” என்று குட்டரஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அதேநேரம் ஹமாஸ் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதோடு இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது” என்றும் அவர் கூறினார்.

30 ஆண்டுகளில் வேறு எங்கும் நடக்காத அளவுக்கு இந்த 4 வாரத்தில் அதிகமான செய்தியாளர்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியாளர்களும் பலியாகிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

காசாவில் இஸ்ரேலினால் 48 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளால் காயமடைந்தவர்களை கையாள முடியாதிருப்பதோடு உதவி விநியோகங்கள் கிட்டத்தட்ட முடியும் நிலையை எட்டியிருக்கும் சூழலில் உணவு மற்றும் சுத்தமான நீர் தீர்ந்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் தொடர்ந்தும் 350,000 பொதுமக்கள் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அங்கு வீடு வீடாக இடம்பெறும் கடுமையான மோதல் தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேல் 2005 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றதோடு 2014 ஆம் ஆண்டு அது கடைசியாக தரை வழி தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது.

கடந்த 15 ஆண்டு காலத்தில் ஹமாஸ் தரைக்குக் கீழும், தரை மட்டத்திலும், தரைக்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்த அவகாசம் இருந்திருப்பதாக வொஷிங்டனைச் சேர்ந்த சிந்தை அமைப்பின் மைக்கல் நைட்ஸ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் தற்பாதுகாப்பில் கண்ணிவெடிகள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், கவசவாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் கட்டடங்களை சிதைக்கக் கூடிய பொறிகளும் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஹமாஸிடம் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் வரை செல்லக் கூடிய சுரங்கப்பாதைகள் இருப்பதோடு, கடத்தப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் போர் நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பயணத்தின் பின் ஜி7 வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்காக ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த மாநாட்டில் காசா விவகாரம் தொடர்பில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை பெற அவர் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் போர் முடிவில் காசாவை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலும் பிளிங்கன் பேசியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற பிளிங்கன், பலஸ்தீன அதிகாரசபையின் கீழான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்தபோது காசாவின் கட்டுப்பாட்டை ஏற்கும்படி கேட்டுள்ளார்.

எனினும் இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு விரிவான தீர்வொன்று எட்டப்பட்டாலேயே பலஸ்தீன அதிகாரசபை காசாவில் அதிகாரத்தை பெறும் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார். எனினும் காசாவில் பொம்மை அரசாங்கத்தை ஏற்கமாட்டோம் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. உலகில் எந்த சக்தியாலும் தம்மை நிர்மூலமாக்க முடியாது என்று லெபனானில் உள்ள ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையும் திங்களன்று மூடிய அறையில் கூடியது. இந்தப் போர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நான்கு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபை மீண்டும் கூடியுள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்காவும் இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திரும்ப அழைத்துள்ளது. காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கூட்டுத் தண்டனையை மேற்கொள்வதாக அது தெரிவித்துள்ளது.

இதன்படி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலுக்கான தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. தவிர, பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT