Sunday, April 28, 2024
Home » காசாவில் மருத்துவமனைகள் செயலிழந்து உதவிகள் முற்றும் தடைப்படும் நெருக்கடி

காசாவில் மருத்துவமனைகள் செயலிழந்து உதவிகள் முற்றும் தடைப்படும் நெருக்கடி

- தொடரும் தாக்குதல்களில் உயிரிழப்பு 6,000 ஐ தாண்டியது

by Rizwan Segu Mohideen
October 26, 2023 7:34 am 0 comment

காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடைவிடாது நேற்றைய தினத்திலும் தொடர்ந்த நிலையில் அங்கு உயிரிழப்புகள் வேகமாக அதிகரிப்பதோடு மருத்துமனைகள் செயலிழந்து மனிதாபிமான உதவிகள் தடைப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காசாவிலுள்ள மருத்துவமனைகளில் மின்பிறப்பாக்கிகளுக்கான நீர் மற்றும் எரிபொருள் தீர்ந்துவரும் அதேநேரம் அதிக எண்ணிக்கையான உயிரிழப்புகள் மற்றும் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் மருத்துவமனைகளில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் மருத்துவமனைகள் செயலிழக்கும் நிலையை எட்டியுள்ளது.

மருத்துவர்கள் குறைந்த அளவான அல்லது மயக்க மருந்துகள் இன்றி, கைபேசி விளக்கின் ஒளியின் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பற்றி அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு எம்மிடம் எரிபொருள் இல்லாதிருப்பதோடு, இதனால் சத்திரசிகிச்சை அறைகள், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர அறைகளே முதலில் பாதிக்கப்படும்” என்று காசா சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் மதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

“அறுவைச் சிகிச்சைகளை கையாளும் மருத்துவமனைகளில் பாரிய எண்ணிக்கையான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மருத்துவப் பணியாளர்கள் சோர்வடைந்திருப்பது மற்றும் மருந்துகள் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது. ஒரு மாதத்திற்கு பயன்படுத்தும் மருந்துகளை ஒரு நாளைக்காக பயன்படுத்தி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்து அல்லது காசாவுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள 35 மருத்துவமனைகளில் குறைந்தது 12 ஏற்கனவே செயலிழந்துள்ளன. அதேபோன்று கடும் வான் தாக்குதலுக்கு மத்தியில் எந்த வகையான மருந்து உதவிகளும் கிடைக்காத நிலையில் காசாவில் உள்ள 72 சுகாதார பராமரிப்பு சிகிச்சை நிலையங்களில் 46 மூடப்பட்டு விட்டதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவில் தமது செயற்பாடுகள் முற்றாக செயலிழக்கும் கட்டத்தை நெருங்கி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் எச்சரித்துள்ளது.

“எமக்கு விரைவாக எரிபொருள் கிடைக்காவிட்டால் காசா பகுதியில் எமது செயற்பாடுகளை நிறுத்த வேண்டி ஏற்படும்” என்று அந்த ஐ.நா நிறுவனம் கூறியது. இந்த நிறுவனம் காசாவில் இடம்பெயர்ந்துள்ள 600,000 மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பாதிக்கும் அதிகமான 1.4 மில்லியன் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போர் வெடித்தது தொடக்கம் காசாவுக்கான எகிப்து எல்லை வழியாக சில டஜன் உதவி ட்ரக் வண்டிகள் நுழைவதற்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நான்காவது கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை எட்டு ட்ரக் வண்டிகளைச் சேர்ந்த மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டிருந்தது. இந்த உதவிகளில் மருந்து, உணவு மற்றும் நீர் இருந்தபோதும் எரிபொருட்கள் விநியோகிக்கப்படவில்லை. ஹமாஸின் கைகளுக்கு செல்லும் எனக் கூறி காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருகிறது.

காசாவில் பாடசாலைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு நிலையங்கள் உட்பட 150 இடங்களில் சுமார் 600,000 பலஸ்தீனர்களுக்கு ஐ.நா நிறுவனம் அடைக்கலம் வழங்கியுள்ளது. அந்த அனைத்து இடங்களிலும் நான்கு மடங்கு அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் பலரும் வீதிகளில் உறங்கி வருவதாக ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் எதந்த்தணிவும் இன்றி அதே வேகத்தில் நேற்றைய தினத்திலும் நீடித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினத்தில் மேலும் 250க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார வட்டாரத்தை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் கொல்லப்பட்ட மொத்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 6,055 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,360 சிறுவர்கள் மற்றும் 1,292 பெண்கள் உள்ளடங்குகின்றனர். தவிர, 16,297 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐந்து பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 36 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் அடங்குகிறார்.

இதில் கொல்லப்பட்ட ஐவரில் மூவர் நேற்றுக் காலை ஜெனின் அகதி முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் கல்கில்யா மற்றும் கலந்தியா பகுதிகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து, அது தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை விவாதத்தில் பெரும்பாலான நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன.

கட்டார் சென்றிருக்கும் துருக்கி வெளியுறவு அமைச்சர் கட்டார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துர்ரஹ்மான் அல் தானியை சந்தித்து பிரச்சினையை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து இஸ்ரேல்–காசா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரம் அச்சம் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.

இஸ்ரேல் படையினருடன் லெபனான் எல்லையில் தொடரும் பலஸ்பர தாக்குதல்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் தமது 11 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT