Monday, April 29, 2024
Home » உலக சுற்றுலா அமைப்பின் தலைமைப் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் சவூதி அரேபியா

உலக சுற்றுலா அமைப்பின் தலைமைப் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் சவூதி அரேபியா

- இலங்கை-சவுதி சுற்றுலாவை மேம்படுத்துவதில் தூதுவர் கஹ்தானி கூடுதல் அக்கறை

by Rizwan Segu Mohideen
October 26, 2023 8:16 am 0 comment

ஐக்கிய நாடுகள் சபையினது உலக சுற்றுலா அமைப்பின் 2024ஆம் ஆண்டுக்கான கவுன்சிலின் தலைமைக்கு இரண்டாவது தடவையாகவும் சவூதி அரேபியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உலக சுற்றுலா அமைப்பின் 120 ஆவது நிர்வாகக்குழுக் கூட்டம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் நகரில் 2023.10.20 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இவ்வமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான கவுன்சிலின் தலைமைக்கு சவூதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சரும், உலக சுற்றுலா அமைப்பின் நிர்வாகக்குழுத் தலைவருமான அஹ்மத் பின் அகீல் அல்-கதீப் விடுத்துள்ள அறிக்கையில், “இவ்வமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுத் தலைமைப் பதவியை வெற்றிகரமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றியதன் பயனாக 2024 ஆம் ஆண்டுக்கான தலைமைப் பதவியும் எமக்கே கிடைக்கப் பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் கூட்டாண்மை, முன்னேற்றங்கள் மற்றும் சவூதியின் ஒத்துழைப்புகள், உறுதியான அர்ப்பணிப்புகள், சுற்றுலாத் துறைச் சாதனைகள் என்பவற்றின் அடிப்படையில் அவ்வமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இத்தெரிவு செய்யக்கூடியதாக அமைந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சவூதி அரேபியாவின் ஆட்சித் தலைமையிடமிருந்து சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு எல்லையற்ற ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வருகிறது.

சவூதி அரேபியா 2021 ஒக்டோபரில் வெளியிட்ட பசுமை முன்மொழிவின் போது, பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் அறிவித்த நிலைபேறான சுற்றுலா இதற்கு சிறந்த சான்றாகும்.

உலக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சவூதி அரேபியா ஆக்கபூர்வ முயற்சிகள் மற்றும் பங்களிப்புக்களை முன்னெடுத்து வருகிறது. அதன் காரணமாக உலக சுற்றுலா அமைப்பின் 26வது அமர்வை 2025 இல் சவூதியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அமர்வொன்று மத்திய கிழக்கு நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

‘எக்ஸ்போ 2030’ கண்காட்சியை ரியாத் நகரில் நடத்த சவூதி தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வெற்றி கிடைத்துள்ளது. இது சவூதியை உலகளாவிய சுற்றுலாவின் முன்னணி தலமாக மென்மேலும் மேம்பட வழிவகுக்கும்.

முஸ்லிம்கள் தங்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக கூடும் முக்கிய இடங்களாக மக்கா, மதீனா விளங்குகின்றன. இவ்விரு தலங்களும் சவூதியில் அமைந்துள்ளன. அதனால் உலகின் நாலாபுறங்களில் இருந்தும் முஸ்லிம்கள் இங்கு வருகை தருகின்றனர். அவர்கள் தங்கள் உம்ரா, ஹஜ் கடமைகளை நிறைவேற்றுதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சவூதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இதன் பயனாக உம்ரா, ஹஜ் யாத்திரிகர்கள் எவ்வித சிரமங்களும் இன்றி தம் கடமைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உம்ரா, ஹஜ் வழிபாடுகள் தவிர நியோம், த லைன், முகஅப் அல் உலாத் திட்டம், பசுமையான சவூதி அரேபியா எனப் பல சுற்றுலா வேலைத் திட்டங்களும் சவூதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளது சுற்றுலா பயணிகளைத் தம் நாட்டுக்குள் கவரும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் அதிநவீன முறையில் மேம்படுத்தப்படுகின்றன. அதேநேரம் சவூதிக்குள் வருகை தருவதற்கென பல வகையான விசாக்களையும் 2019 முதல் சவூதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக சவூதிக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியுள்ளது. அத்தோடு சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளது எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. சுற்றுலா அமைச்சர் ஹரீன் பெனாண்டோவுடனும் தூதுவர் ஹமூத் அல் கஹ்தானி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தி வலுப்படுத்தும் வகையில் சவூதி தூதுவர் முன்னெடுக்கும் பணிகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா முன்னேற்றமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

ஆகவே இரு புனித தலங்களின் காவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டல்களில் 2030 ஆம் ஆண்டாகும் போது உலகில் தலைசிறந்த 5 சுற்றுலா நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் இடம்பிடிக்கும் என்று நம்பப்படுகின்றது.

அஷ்ஷெய்க் எம்.எச். சேஹுத்தீன் மதனி பி.ஏ.
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT