Sunday, April 28, 2024
Home » உள்ளங்களை பண்படுத்தும் வல்லமை வாய்ந்தது வாசிப்பு

உள்ளங்களை பண்படுத்தும் வல்லமை வாய்ந்தது வாசிப்பு

by Rizwan Segu Mohideen
October 17, 2023 6:02 pm 0 comment

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது என்பர். இது பழைய வாசகம் என்றாலும் ஆழமான அர்த்தங்களை தாங்கிய வாசகமாக இருக்கின்றது. மனிதனுக்கு போதிய அறிவு இல்லையென்றால் அவனால் ஒரு காரியத்தை முழுமையாக்க முடியாது.

வாசிப்பு இல்லாதவன் அறிவைப் பெற முடியாது. வாசிப்பில்லாத மனிதனின் பேச்சுகள் தெளிவற்றதாகவே காணப்படும். வாசிப்பின் உருசியை உணர்ந்தவன் வாசிப்பால் உயர்ந்தவனாக காணப்படுவான். மனிதனை மனிதனாக்குவது கல்வியும் அதனோடிணைந்த வாசிப்பும்தான். இதனையே “நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என ஒளவையார் நாலடியார் நூலில் பாடியுள்ளார்.

தனக்கு மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் தன்னை தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை புத்தகத்தை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

ஒரு கோடீஸ்வராக இருந்தாலும் அவன் வீட்டில் வாசிப்பிற்காக ஓரிடமோ அல்லது சில புத்தகங்களோ இல்லையெனில் அவன் சொத்துக்களற்ற ஏழைக்கு சமனாவான்.

‘எட்டானல் வெலோசிற்றி’ எனும் நூல்தான் டொக்டர் அப்துல் கலாமை அணுவிஞ்ஞானியாக மாற்றியது என அவரே குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மாகாந்தியின் சத்தியசோதனை புத்தகம்தான் மார்ட்டின் லூதர் கிங்கை உருவாக்கியது.

இறுகிய தரிசு நிலங்களை உழுது பண்படுத்துவது போல் வாசிப்பும் மனித மனங்களை பண்படுத்தி நல்ல பண்புள்ளவனாக மாற்றிவிடும் சக்தி கொண்டதாக இருக்கின்றது. வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து “எப்போது பார்த்தாலும் வாசிப்பும் நூலகமும்” என கிண்டல் செய்பவர்களும் எம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு எழுத்தாளனுக்கு சொற்பிரயோகங்கள், தமிழ் இலக்கண வழுக்களற்ற நடை, சமூகமயமாகுதல், உலக நடத்தைகள் மற்றும் நாளாந்த, வாராந்த, மாதாந்த நடப்புகள் என பல விடயங்கள் தேவையாக இருக்கின்றன.

வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை பற்றிய ஒவ்வொரு தலைப்புக்களிலான நூல்கள் ஆயிரமாயிரம் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன.

அதேபோன்று அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, அறிவு சார்ந்த இன்னும் பலவகையான எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. வாசிப்பை வாழ்க்கையில் ஒரு பகுதியாகக் கொண்டவர்கள் வாழ்க்கையை வென்றுவிடுவார்கள்.

நாளாந்த பத்திரிகை வாசிப்பு எம்மில் மிகவும் குறைந்து விட்டது. பத்திரிகைகள், சஞ்சிகைகளின் வெளியீடுகளும் குறைந்து விட்டன. வாசிப்பு மீதான நாட்டம் மக்கள் மத்தியில் குறைந்ததே இதற்குக் காரணம். பத்திரிகைகளை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்து விட்டன.

தன் கையடக்கத்தில் ‘ஸ்மார்ட் போன்’ இருந்தால் உலகே கையில் வந்தது போன்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் வாசிப்பின் பயனை இன்னும் உணரவில்லை. சமூக ஊடகங்களில் வீண்வாதங்களும் புரளிகளும் போர்களுமே இன்று பரவலாய் பொழுதுபோக்காக மாறியுள்ளன.

“ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. வாசிப்பைத் தூண்டக்கூடிய வகையில், வாசிப்பை ஊக்கப்படுத்தக் கூடிய வகையில் குழந்தைகளுக்கு அதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பரீட்சை வினாத்தாள்களை சரளமாக வாசித்து விடை எழுத எத்தனை மாணவர்களால் இன்று முடியுமாக இருக்கிறது என்றால் அது குறைவுதான்.

ஏனென்றால் அவர்கள் பிறந்து நடைபயில முன்பதாகவே அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் கையில் ஸ்மார்ட் போன் கொடுக்கப்படுகிறது.

அங்கேயே அவர்களது மூளை சோர்வடைய ஆரம்பித்து விடுகிறது. வகுப்பில் உள்நுழைந்து ஆராய்ந்து பார்த்தால் எத்தனையோ மாணவர்கள் வாசிப்பில் சரளம் இல்லை என்பது தெரிந்து விடும். மாணவர்கள் மத்தியில் உச்சரிப்பு, எழுத்துக்களை அடையாளம் காண்பது போன்றவற்றில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்” என்றாராம் வின்ஸ்டன் சேர்ச்சில்.

வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர் இடங்களில் உள்ளவர்கள் அனைவரின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் நல்ல வாசிப்பாளனாகத்தான் இருந்திருக்கின்றார்கள்.

முஹம்மது இஸ்மாயீல் ஹைறுன்னிஸா
(Diploma in Journalism SEUSL)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT