Wednesday, May 8, 2024
Home » மாத்தறை மாவட்டத்தை பெரிதும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை!

மாத்தறை மாவட்டத்தை பெரிதும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை!

by damith
October 9, 2023 6:20 am 0 comment

நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி தீவிரமடைந்துள்ளது. இதனை வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே பல பிரதேசங்களிலும் அடிக்கடி மழை பெய்து வருவதோடு, சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.

அதனால் தாழ்நிலப் பிரதேசங்கள் பலவற்றில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதோடு பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. அதனால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மழைவீழ்ச்சியினால் குளங்கள், நீர்த்தேக்கங்கள் என்பன நிரம்பி வழியும் நிலையை அடைந்துள்ளதோடு சில கங்கைகள் பெருக்கெடுத்தும் உள்ளன.

குறிப்பாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது நதிகள் பெருக்கெடுத்திருக்கின்றன. அதனால் தென்மாகாணத்தின் பிரதான மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மாத்தறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திககொட, கம்புறுப்பிட்டிய, திக்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பிரதேச மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். சில பிரதேசங்களில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக்கட்டடங்களுக்குள் மாத்திரமல்லாமல் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் சொத்துகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு மாத்தறை மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு கடந்த 5ஆம், 6 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அதேநேரம், தற்போதைய வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் மாத்தறை மற்றும் காலி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதோடு, அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாத்தறை மாவட்ட மக்களுக்கென மாலிம்பட, அக்குரஸ்ஸ, கம்புறுப்பிட்டிய, திஹகொட ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண உணவு தயார்படுத்தல் நிலையங்கள் ஊடான சமைத்த உணவு நிவாரணம் இராணுவத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

அதேநேரம் இவ்வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாலிம்பட பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கென விசேட நிவாரணத் திட்டமொன்றையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இவை இவ்வாறிருக்க, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும் அவர்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவுமென 600 இராணுவ வீரர்கள் மாத்தறை மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் பெருக்கெடுப்பினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலை மாத்தறை மாவட்ட மக்களின் இயல்புநிலையைப் பெரிதும் பாதித்திருப்பது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி, 2,114 குடும்பங்களைச் சேர்ந்த 8,597 பேர் நேற்றுக்காலை வரையும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நில்வளா கங்கையின் பெருக்கெடுப்பால் மாத்தறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய பிரதேசங்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவையும் நிலவவே செய்கிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி தீவிரமடைந்திருக்கும் சூழலில், நீர் மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டங்கள் உயர்ந்து வருவதோடு களுகங்கை, அத்தனுகலு ஓயா போன்றவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையும் நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய மழைவீழ்ச்சி அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களமும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே தற்போதைய சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக அனர்த்தங்களின் விளைவான பாதிப்புக்களையும் சேதங்களையும் குறைத்து தவிர்த்துக்கொள்ள முடியும். அதுவே துறைசார் உத்தியோகத்தர்களின் கருத்தும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT