Saturday, April 27, 2024
Home » 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி; 21 பேர் காயம்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி; 21 பேர் காயம்

by Prashahini
October 4, 2023 9:49 am 0 comment

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

மரண வீடொன்றின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மற்றும் டிக்கோயா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (03) இரவு 9.00 மணியளவில் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பிரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த தரப்பினர் ஹட்டன் காசல்ரி பகுதியில் இறுதி சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் பயணித்த பஸ்ஸில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

எனவே, பேருந்தில் பயணித்த அனைவரும் மஸ்கெலியா நகரில் இருந்து வாடகை அடிப்படையில் சிறிய லொறியொன்றில் பிரவுன்ஸ்விக் தோட்டத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த லொறி வீதியை விட்டு விலகிச் சென்று 50 அடி பள்ளத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது லொறியில் 23 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் 17 பெண்களும், 4 ஆண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 04 பேர் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கும், ஆபத்தான நிலையில் இருந்த 17 பேர் டிக்கோயா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

லொறியின் அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்ற காரணத்தினால் லொறி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT