Saturday, April 27, 2024
Home » தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்க ஏற்பாடு

தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்க ஏற்பாடு

by sachintha
October 3, 2023 7:04 am 0 comment

நோயாளர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என்கிறார் அமைச்சர் கெஹெலிய

கொவிட் காலத்திலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் அவசர தேவைக்காக முறையான கேள்விகள் இல்லாது இறக்குமதி செய்யப்பட்ட நடைமுறையை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது

அவசர மருந்துகள் கொள்வனவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முற்றாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தட்டுப்பாடின்றி நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அதேவேளை சுயாதீன சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதுதொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர், மருந்து முகாமைத்துவம், மீளாய்வு மற்றும் மூலோபாய நிபுணத்துவக் குழுவின் பரிந்துரைக் கிணங்க தமது பணிப்புரையின் பேரில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கொவிட் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துப் பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய நேர்ந்ததாகவும் அந்த சந்தர்ப்பங்களில் அவ்வாறு மருந்துகளை கொள்வனவு செய்யாவிடில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்க முடியாமல் போயிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,மருந்துகளின் அவசியத்தைக் கவனத்திற்கொண்டு அவசர மருந்துக் கொள்வனவுகள் இடம்பெற்றுள்ளதே தவிர எவரதும் தனிப்பட்ட தேவைக்கிணங்க அவசர மருந்துக் கொள்வனவு இடம்பெறவில்லை. தொழிற்சங்கங்கள் அவசர மருந்துக் கொள்வனவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்த வகையில் 307 மருந்துவகைகள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்டதுடன், அதில் இரண்டு மருந்துகள் தரம் குறைந்த மருந்துகளாக கருதப்பட்டன. நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் நூற்றுக்கு 90 வீதமான மருந்துகள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன.

அதனால் அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அரசாங்கங்கங்களுக்கிடையில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வழிமுறை எதிர்காலத்தில் பின்பற்றப்படவுள்ளது.

அரசாங்கம் மற்றுமொரு அரசாங்கத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்யும் முறைமையானது முறைக்கேடுகளை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வழிவகுக்கும்.

எதிர்வரும் 3 மாதங்களுக்குத் தேவையான 64 மருந்து வகைகளில் 54 மருந்து வகைகள் பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து நாட்டுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

அத்துடன் தட்டுப்பாடின்றி நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அதேவேளை சுயாதீன சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT