Monday, April 29, 2024
Home » மானுட நேயத்தின் மாண்பை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை

மானுட நேயத்தின் மாண்பை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை

சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சபா.ஜெயராசா புகழாரம்

by gayan
September 28, 2023 8:22 am 0 comment

இராமநாதன் கல்லூரி வழங்கிய வளமான அறிவுத்தேட்டத்துடன் இதழியல் துறைக்கு வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மானுட நேயத்தின் மாண்பை வெளிப்படுத்திவரும் வகையில் தனது எழுத்துப்பணியை மேற்கொண்டுவரும் அன்னலட்சுமி இராஜதுரை அவர்களின் எழுத்துப்பணிகள் நீடித்த பயன் அறிவு சார்ந்த அனுபவப் பதிவுகளாக உள்ளன என்று பேராசிரியர் சபா.ஜெயராசா கூறினார்.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட ‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெற்ற போது பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை வகித்து உரையாற்றினார்.

அவர் தனதுரையில் தெரிவித்ததாவது:

“சிறந்த செய்தி அளிக்கையாளர், ஆலோசனையும் ஆற்றுப்படுத்தலும் வழங்கும் ஆசிரிய தலையங்க எழுத்தாளர், நிதானமாகக் கருத்துகளைப் பகிர்ந்தளிக்கும் இதழ்கீலம் என்ற பத்தி எழுத்தைப் படைப்பவர் என்ற பல நிலைகளிலே அவரது இதழியல் எழுத்துகள் அமைந்துள்ளன.

இதழியலிலே பணியாற்றுபவர்கள் மொழிபெயர்ப்புத்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தமது ஆக்கங்கள் வாயிலாக அவர் நிரூபித்து வருகின்றார். ஆக்க இலக்கிய எழுத்துக்களில் ஈடுபட்டு வரும் அவர், ஆங்கிலக்கதைகளையும் கவிதைகளையும் தமிழுக்குக் கொண்டு வந்து வளமான மொழி அளிக்கைகளைத் தந்துள்ளார்.

அன்னலட்சுமி அவர்கள் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், உரைநடைச் சித்திரம், கட்டுரை, இலக்கியம், திறனாய்வு இலக்கியம் போன்ற பன்முகத்துறைகளிலே தடம் பதித்தவர். அவரது எழுத்துகள் சமூகநீதியும் சத்தியம் என்ற உண்மை அழுத்தமும் நிறைந்திருப்பவை. ஆழ்ந்த கருத்துக்களும் அழகான அழகான எடுத்துரைப்பும் எழுத்துகளுக்கு அழகு சேர்ப்பன.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவற்றின் பணிகள் இலக்கிய நிலயில் மட்டுமின்றி சமூக நிலையிலும் முக்கியமானவை. அவற்றை மறைகரமாக நின்று இயக்கி வருபவர் வவுனியூர் இரா.உதயணன். புகழ்ச்சியையும் பாராட்டையும் விரும்பாதவர், வவுனியாவிற்கு இலக்கிய அடையாளம் கொடுப்பதில் முதல்நிலை அரங்கில் நின்று உழைத்து வருபவர்.

பல்கலைக்கழக மாணவர்கள், போரின் இடரினால் தாக்கப்பட்டோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்ற பலதுறையினரையும் அரவணைத்து அவர் மேற்கொள்ளும் உதவிகள் ஏராளம். தனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தான் செய்யும் உதவிகளை அவர் கூறுவதில்​ைல. அத்தகைய பெருந்தன்மைமிக்கவர்.

வெளியீட்டுத்துறையில் கால்பதித்து இதுவரை பல நூல்களை பதிப்பித்து கொடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அந்த வகையில் மூத்த பெண் எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகளையும் பதிப்பித்து வழங்கியுள்ளார். அடுத்த முயற்சியாகத் தமிழ் கலைச்சொல் தொகுதி ஒன்றை வெளியிடவுள்ளார். கலைச்சொல்வாக்கம் உலகளாவிய நிலையில் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் அந்தப்பணியை அவர் முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அவரது பணிக்கு துணை நிற்கும் செயற்பாட்டாளர்கள் தம்புசிவா, கே.பொன்னுத்துரை, மேமன்கவி ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்”.

இவ்வாறு பேராசிரியர் சபா.ஜெயராசா தெரிவித்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடன், செல்வி பிரியன்கா ஆன் பரான்சிஸ் தமிழ் வாழ்த்து பாடி ஆரம்பித்து வைப்பார். இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவற்றின் இணைப்பாளர் த. சிவசுப்பிரமணியம்(தம்புசிவா) வரவேற்புரையையும், தொடக்கவுரையம் நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகளை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் மற்றும் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை. எஸ்.தில்லநடராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் ஊடக அதிதிகளாக தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், வீரகேசரி பிரதமஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், தமிழன் பிரதம ஆசிரியர் இரா. சிவராஜா, வீரகேசரி நிறுவன பிரதம செய்தி முகாமையாளர் ஆர். பிரபாகன் மற்றும் ஊடகவியலாளர் திருமதி உமா சந்திரா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

நூல்விமர்சனத்தை எழுத்தாளாரும், ‘தகவம்’ செயலாளருமான திருமதி வசந்தி தயாபரன் ஆற்றினார்.

முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ள சிறப்பு பிரதிகளை தொழில் அதிபர்களான் திருமதி சண்முகப்பிரியா கார்த்திக், ராஜ்பிரசாத் விஸ்வநாதன் (துரைவி), திருமதி கௌசல்யா கோவிந்தப்பிள்ளை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஏற்புரையை நூலாசிரியர் திருமதி அன்னவட்சுமி இராஜதுரை அவர்கள் நிகழ்த்த, நன்றியுரையை இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் ஊடக இணைப்பாளர் கலாபூஷணம் கே.பொன்னுத்துரை நிகழ்த்தினார்.

நிகழ்வுகளை மேமன்கவி தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT