Sunday, April 28, 2024
Home » இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டுப் போட்டி:

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பதக்கம் உறுதி

by damith
September 25, 2023 6:57 am 0 comment

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளது.

ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண விளையாட்டுப் போட்டியில் நேற்று (24) பாகிஸ்தானை சந்தித்த இலங்கை அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. டி20 வடிவத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்டங்களை அதிகரிக்கத் தவறியது.

அந்த அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மூவர் மாத்திரமே இரட்டை இலக்கங்களை பெற்ற நிலையில் ஆரம்ப வீராங்கனை ஷவால் சுல்பிகார் பெற்ற 16 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது.

இதன்போது அபாரமாக பந்து வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் உதேஷிகா பிரபோதனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஹஷிதா சமரவிக்ரம அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கும் சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வெல்வது உறுதியாகியுள்ளது.

இலங்கை அணி இறுதிப் போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணி தனது அரையிறுதியில் பங்களாதேஷ் அணியை 51 ஓட்டங்களுக்கு சுருட்டி இலகு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து நிரோஷன் பிரியங்கர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT