Thursday, May 9, 2024
Home » மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாகப் பூர்த்தி செய்து மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாகப் பூர்த்தி செய்து மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
September 21, 2023 6:41 am 0 comment

– மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின் கட்டணத்தை குறைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் இலக்காகக் கொள்ளப்பட்ட 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி அந்த இலக்கை அடைய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இந்திக அனுருத்த கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாகும். அதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை நாட்டில் தக்கவைத்துக்கொள்ள முடியும். எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகையை குறைப்பதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும். மேலும், இந்தப் பணத்தை ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

நாட்டின் 70% எரிசக்தி தேவைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. எனவே 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் இலக்கை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது, கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்களங்களின் ஊடாக 685 மெகாவோர்ட் , நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின்களங்களினால் 140 மெகாவோட் ,காற்றாலை மின் நிலையங்களின் ஊடாக 263 மெகாவோர்ட், சிறிய நீர் மின் நிலையங்களினால் 434 மெகாவோர்ட் மற்றும் பாரிய நீர்மின் நிலையங்களின் ஊடாக 1573 மெகாவோர்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படுகின்றன.

மேலும், சூரிய சக்தி மின்நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க தேவையான இடங்களை அடையாளம் காணும் பணியை நிலைபெறு தகு வலு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

இது தவிர, தற்போது திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் முன்னேற்றத்தை ஆராயவும், அவற்றின் செயல்திறனை சரிபார்க்கவும் இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனுடன், திட்டங்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் அனுமதி வழங்குவதற்குத் தேவையான நடைமுறைகளைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை இணைப்பதில் ஏற்படும் உறுதியற்ற தன்மையை சமாளிக்க இந்தியாவின் ஊடாக தெற்காசிய மின்சாரக் கட்டமைப்புடன் அதனை இணைக்கத் தேவையான ஆரம்பகட்டச் செயற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எமது நாட்டில் எரிசக்தியை மேம்படுத்த சிறந்த திட்டம் தேவை. அதற்காக 2023 முதல் 2026 வரை ஒரு திட்டத்தையும், 2027 முதல் 2030 வரை அதன் தொடரான திட்டமொன்றையும் மின்சார சபை தயாரித்துள்ளது. அதன் அடிப்படையில் தேவைக்கேற்ப உரிய திட்டங்களை மாற்றி நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

உமா ஓயா திட்டப் பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகின்றன. ஆனால் தற்போது அதன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே, அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அடுத்த மாதத்திற்குள் பிரதான மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதற்கு காலம் பிடிக்கும். ஆனால் அதற்கான சாத்தியக்கூற்று ஆய்வை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT