Monday, April 29, 2024
Home » இங்கிலாந்திடம் இலங்கை மகளிர் தொடர் தோல்வி

இங்கிலாந்திடம் இலங்கை மகளிர் தொடர் தோல்வி

by gayan
September 16, 2023 11:07 am 0 comment

நெட் சிஸ்வர் பிரன்டின் அதிரடி சதத்தின் உதவியோடு இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 161 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து மகளிர் அணி ஒருநாள் தொடரையும் 2–0 என கைப்பற்றியது.

லெய்செஸ்டரில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற இந்தப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக 31 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 18 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்தபோதும் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த அணித் தலைவி பிரன்ட் மற்றும் மையா பெளசர் 193 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது பிரன்ட் தனது எட்டாவது ஒருநாள் சதத்தை 66 பந்துகளில் பெற்று இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் பெற்ற வீராங்கனையாக சாதனை படைத்தார். அதில் அவர் 70 பந்துகளில் சதம் பெற்ற சார்லட் எட்வட்ஸின் சாதனையையே முறியடித்தார்.

கடைசியில் பிரன்ட் 74 பந்துகளில் 14 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 120 ஓட்டங்களை பெற்றதோடு மறுபுறம் பெளசர் 95 ஓட்டங்களுடன் சதத்தை தவற விட்டார்.

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 31 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை மகளிர் சார்பில் கவிஷா டில்ஹானி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். என்றாலும் அவர் 4 ஓவர்களில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இலங்கை மகளிர் அணி ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் இங்கிலாந்தின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்போனது.

பதிலெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி ஆரம்பம் தொட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மத்திய வரிசையில் ஹசினி பெரேரா அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றபோதும் வேறு எவரும் 16 ஓட்டங்களை கூட தொடவில்லை.

இதனால் இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் சார்லி டீ 5 விக்கெட்டுகளையும் லோரன் பிலர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை இழந்தபோதும் முன்னதாக நடந்த டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT