Monday, April 29, 2024
Home » திருச்சிலுவையின் மாட்சிப் பெருவிழா

திருச்சிலுவையின் மாட்சிப் பெருவிழா

செப்டம்பர் 14ஆம் திகதியில் திருச்சபை சிறப்பிக்கின்றது

by damith
September 12, 2023 11:23 am 0 comment

கத்தோலிக்க திருச்சபை செப்டம்பர் 14ஆம் திகதி திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது.

சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாகவே இருந்தது.

இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார்.

தொடக்க காலத்திலிருந்தே நாமும் சிலுவை அடையாளத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

காலை எழுந்ததிலிருந்து, வேலை தொடங்குமுன், வழிபாட்டில், உணவு உண்ணுமுன், ஆலயங்களைக் கடந்துசெல்லும்போது… என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிலுவை அடையாளத்தை நம்மீது வரைந்துகொள்கிறோம்.

அதே வேளையில் அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் (பிலி 2:6-11) என்று பவுலடியார் கூறுகிறார்.

நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

அதேபோன்று சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார்.

ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம்.

அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல நமக்கும் அவரது வெற்றியிலும் மாட்சியிலும் பங்கு தருவார்.

சிலுவை என்றவுடன் பலருக்கு துன்பம், வேதனை, பாடுகள்,கண்ணீர், கவலைதான் உடனே கவனத்திற்கு வரும். ஆனால், நம் ஆண்டவர் இயேசு, மனித வரலாற்றின் அவமானச் சின்னமாக, கொலைக்கருவியாக இருந்த சிலுவையைத் தம் பாடுகள், மரணத்தால் வாழ்வின் சின்னமாக, வெற்றியின் கருவியாக மாற்றியதை உலகமே உணறும்.

சிலுவை, நம் இறைவன், விண்ணையும் மண்ணையும் இணைக்க பயன்படுத்தியது. மனிதனையும் இறைவனையும் இணைப்பது. பாவத்தின் பரிகாரம். அருளின் ஊற்று. தோல்வியின் அஸ்தமனம். வெற்றியின் உதயம். சாவின் சங்கொலி. உயிர்ப்பின் எக்காளம். பொய்மை அநீதி, ஆணவம், அதிகாரம் இவற்றின் இயலாமை. உண்மை, நீதி, பணிவு, அடக்கம் இவற்றின் வல்லமை.

இச்சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்டபோதுதான் அன்பு, தியாகம், தாழ்ச்சி இவற்றின் உண்மை முகம் உலகுக்கு உயர்த்தி காண்பிக்கப்பட்டது. “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவா 3’16)

இந்தச் சிலுவைகளை நாள்தோறும் மகிழ்வோடு சுமப்பவன் கிறிஸ்தவன். அவன் வாழ்வில் உயர்வடைவான்.

அருட்தந்தையர்கள்: பவுல் லியோன், குமார்ராஜா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT