Home » அடுத்த வாரத்தில் முட்டை விலை குறைவடையும்; அமைச்சர் நளின் பெனாண்டோ

அடுத்த வாரத்தில் முட்டை விலை குறைவடையும்; அமைச்சர் நளின் பெனாண்டோ

- பெருமளவு கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் திட்டம் தொடர்பில் ஆராய்வு

by Prashahini
August 8, 2023 4:20 pm 0 comment

– முட்டை விலை ரூ. 38 இற்கு குறையும் என எதிர்பார்ப்பு

எதிர்வரும் வாரங்களில் 38 ரூபாவுக்கு முட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்கு தினமும் தேவைப்படும் முட்டைகளில் 35 வீத குறைபாடு காணப்படுவதாலே வெளிநாடுகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில். எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், முட்டை இறக்குமதி அரசாங்கத்தினால் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே. நாட்டிற்கு தினந்தோறும் தேவைப்படும் முட்டைகளில் தேசிய உற்பத்தியிலிருந்து கொள்வனவு செய்த போதும் 3 இலட்சம் முட்டைகளுக்கான குறைபாடு காணப்படுகின்றது. அந்த வகையில் நூற்றுக்கு முப்பது வீதமான குறைபாடு காணப்படுகிறது.

5% அல்லது 10% குறைபாடு என்றால் எம்மால் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். எனினும் 30% என்பது இப்போதைக்கு எம்மால் நிவர்த்தி செய்து கொள்ள முடியாத காரணத்தாலேயே நாம் வெளிநாடுகளிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்தோம்.

அதேபோன்று நாட்டுக்கு போதுமான அளவில் முட்டையை உற்பத்தி செய்வதற்கு எமக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தொடர்பில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய அமைச்சுக்களோடு நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும் அடுத்த வருடம் நடுப்பகுதி வரை அவ்வாறு முழுமையான தேவையை நிவர்த்தி செய்ய முடியாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முட்டைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய உற்பத்தியாளர்கள் நான்கு பேரே உள்ளனர். அவர்களே பாரிய முட்டை உற்பத்தியாளர்கள். அவர்களே முட்டை வர்த்தகத்தில் பெரும் அழுத்தங்களை மேற்கொள்கின்றனர்.

நாம் தற்போது சதொச மற்றும் ஏனைய வர்த்தக சந்தைகளில் 35 ரூபா வுக்கு முட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் போது தேசிய உற்பத்தியாளர்களும் சிறு விலைக் குறைப்பை கடந்த வாரங்களில் மேற்கொண்டனர். 65 ரூபா வரை சென்ற முட்டையின் விலை 50 ரூபா வரை குறைக்கப்பட்டது.

சில இடங்களில் 44 ரூபாவுக்கும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வாரமளவில் 38 ரூபா வரை அதன் சில்லறை விலை குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

ஒரு நாள் கோழிக்குஞ்சு கடந்த காலங்களில் 300 ரூபாவுக்கே விற்கப்பட்டது. எனினும் தற்போது அது 950 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் இது எந்தளவு கேள்வி உள்ள ஒரு வர்த்தகமாக மாறியுள்ளது என்பதை குறிப்பிடத் தேவையில்லை. அதனால் சிறு அளவில் முட்டை உற்பத்தி செய்வோர் கோழிக்குஞ்சுகளை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் பாரிய உற்பத்தியாளர்கள் அதனைப் பெற்று வருகின்றனர். அதன் மூலம் முட்டை ஏகாதிபத்தியத்தை முன்னெடுப்பதே அவர்களின் செயற்பாடாக உள்ளது.

அதனால் ஜனாதிபதி, விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சு ஆகியவை இணைந்து நாம் பேச்சுவார்த்தை நடத்தி குஞ்சுகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதன் மூலமே உற்பத்திகளை அதிகரிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT