Friday, May 10, 2024
Home » காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைக்கு 33 வருடம்; கவனஈர்ப்பு பேரணி

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைக்கு 33 வருடம்; கவனஈர்ப்பு பேரணி

- ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க பிரகடனமும் கையளிப்பு

by Prashahini
August 3, 2023 12:33 pm 0 comment

முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வலியுறுத்தி காத்தான்குடியில் இன்று (03) கவனஈரப்பு பேரணியொன்று இடம் பெற்றது.

1990 ஓகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத மிலேச்சத்தனமான தாக்குதலின் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்டார்கள். (மார்க்க பாதையில் மரணம்)
இதன் 33 ஆவது நினைவு தினத்தையொட்டி காத்தான்குடியில் இந்த பேரணி இடம் பெற்றது.

இந்த பேரணியினை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஷஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம், காத்தான்குடி வர்த்தகர் சங்கம், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகியவைகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பேரணியின் பிரகடனம் காத்தான்குடி முதலாம் குறிச்சி அந் நாசர் சந்தியில் வைத்து வாசிக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து பேரணியாக காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு வைத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் அவர்களிடம் பிரகடனம் கையளிக்கப்பட்டது.

இதில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ரஊப் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சம்மேளன செயலாளர் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி பிரகடனத்தை வாசித்தார்.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர். இனப் பிரச்சினைக்குரிய தீர்வுகள் முன்வைக்கப்படுகின்ற போது அத் தீர்வு திட்டத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்குரிய தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.

1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

1990 ஜூலை மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் சுமார் 170 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு கடத்தி படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள இடம் அடையாளம் காணப்பட்டும் இதுவரை அவைகளை தோண்டி எடுப்பதற்கான எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களதும், கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்குரிய எவ்விதமான நஷ்டஈடு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

யுத்த காலங்களில் காத்தான்குடியை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் அவர்களது இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் காத்தான்குடி பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்கள். காத்தான்குடி பிரதேசத்தின் எல்லை பிரச்சினை மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. 1997.07.04ம் ஆண்டின் 983 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காத்தான்குடி நிலப்பரப்பானது 565.265 ஹெக்டேர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 419 ஹெக்டெயர் நிலப்பரப்பே தற்போது ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது.

எனவே, உடனடியாக காத்தான்குடி பிரதேசத்தின் எல்லை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் அரச காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை காணியற்ற முஸ்லிம் மக்களுக்கு குடியிருப்பு காணிகளாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரச உயர் பதவிகளின் போது இன விகிதாசார ரீதியில் முஸ்லிம்களுக்கும் சமநிலை பேணப்படல் வேண்டும் போன்ற விடயங்கள் பிரகடனங்களாக இதில் எழுதப்பட்டுள்ளன.

இலங்கைத் தீவின் சமாதானத்தையும் சகவாழ்வையும் மத நல்லிணக்கத்தையும் மதச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என இப் பிரகடனத்தின் ஊடாக வேண்டிக் கொள்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT