Thursday, May 9, 2024
Home » பணவீக்கத்தில் ஏற்படும் வீழ்ச்சியின் பயனாக மக்களுக்கே நன்மைகள்

பணவீக்கத்தில் ஏற்படும் வீழ்ச்சியின் பயனாக மக்களுக்கே நன்மைகள்

by admin
July 5, 2023 6:00 am 0 comment

aஇலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பலவிதமான சாதகப் பிரதிபலிப்புக்கள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன. குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலத்தில் அதிகரிக்கப்பட்ட பொருட்கள், சேவைகளின் விலைகள் அண்மைக் காலமாக குறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது எரிசக்தியின் விலைகளில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, மின்கட்டணமும் குறைக்கப்பட்டிருக்கிறது. எரிவாயுவின் விலையும் மூவாயிரம் ரூபாவுக்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதியும் கடந்த சில மாதங்களாகத் தொடராகக் குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த 300 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடையும் நீக்கப்பட்டுள்ளது.

பணவீக்கமும் கடந்த சில மாதங்களாகத் தொடராக வீழ்ச்சி அடைந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த மே மாதம் 25.2 வீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஜுன் மாதம் 12 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் இவ்வருடத்தின் இறுதியாகும் போது இந்நாட்டின் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சி அடைந்துவிடும் என்று கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘பணவீக்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடராக ஏற்பட்டுவரும் வீழ்ச்சியின் பின்புலத்தில் அடுத்த மாதம் நிறைவடையும் போது இந்நாட்டின் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சி அடைவதோடு 7 முதல் வீதம் 8 வீததிற்கு குறைவடையும்’ என்று முன்னாள் நிதியமைச்சரான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

‘கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் 80 வீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், குறுகிய காலப்பகுதிக்குள் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதே அனைத்து திட்டங்களதும் இலக்காகவும் நோக்காகவும் உள்ளது.

அதனால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத தீர்மானங்கள் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் எடுக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுவரும் பின்புலத்தில் தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பொருளாதார மீட்சிக்கான பிலதிபலன்களை மக்கள் அனுபவிக்கும் சூழலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சி அடையும் போது பொருட்கள், சேவைகளின் விலைகள் மேலும் குறைவடையும். இதன் விளைவாக பொருட்கள், சேவைகளின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைவதோடு மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியிலான அசௌகரியங்களும் குறைவடையும்.

2022 ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு கடனாக மீளச்செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அன்றைய தினம் வெறும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே திறைசேரியில் காணப்பட்டது. அதனால் பொருளாதார நிலை மீள ஸ்திரமடையும் வரையும் கடனை மீளச்செலுத்த முடியாது என அரசாங்கம் அன்று அறிவித்தது. அந்தளவுக்கு அன்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறான அடைவுகளை அடைந்து கொள்வதற்கு ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்தான் மூலகாரணமாகவும் அடித்தளமாகவும் அமைந்திருக்கின்றன. இதில் மாற்றுக் கருத்திக்கு இடமில்லை. இருப்பினும் இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரணியினர் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் இவர்களது முயற்சிகளின் உள்நோக்கத்தை மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருந்த போது அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க முன்வராத எதிரணியினர் இன்று ஜனாதிபதியின் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு அவர்களும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT