இன்று முதல் உயர் தரப் பரீட்சை நிறைவடையும் வரை மின் துண்டிப்பு இல்லை

- பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்கும்
- ஏற்படும் செலவை கட்டண திருத்தத்தில் ஈடு செய்ய முடிவு
- மின்சார சபை, மின் சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடு ஆணைக்குழு இணக்கம்
- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் முடிவு

கடந்த ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலப் பகுதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் யோசனையை முன்வைத்தன.

அதற்கமைய அந்த நோக்கத்திற்காக ஏற்படும் செலவுகளை அறிவிடுவதற்கு தேவையான நிபந்தனைகளை மேற்கொள்ள, உத்தேச மின்சார கட்டணத் திருத்தத்தை செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, உரிய தொகையை 60 நாட்களுக்குள் வழங்க அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சும் இந்த தீர்வை செயல்படுத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்பை வழங்க வேண்டும். அதன்படி, இன்று (25) முதல் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை மின்சாரத்தை துண்டிக்காதிருக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்போது, ​​இந்த இணக்கமானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையாக  உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புக்கொண்டுள்ளது.

2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமை மீறலாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் வெட்டு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்க இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர், மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று (25) முன்னிலையாகிய நிலையில் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image


Add new comment

Or log in with...