நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிப்பு (பட்டியல் இணைப்பு)

- 12 விடயங்களின் அடிப்படையில் கட்டணம் அதிகரிப்பு
- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32 இலிருந்து ரூ. 40
- வருடாந்தம் ஜூலை 01 இல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது ரூ. 32 ஆக உள்ள குறைந்தபட்சட பஸ் கட்டணம் ரூ. 40 ஆக அதிகரிக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இன்று (30) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வருடாந்தம் பஸ் கட்டணங்களை திருத்துவது தொடர்பான தேசிய கொள்கையின் அடிப்படையில் வருடாந்தம் ஜூலை 01ஆம் திகதி பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆயினும் இவ்வருடத்தில் மாத்திரம் 4 தடவைகள் பஸ் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த 4 தடவைகளும் எரிபொருள் விலையேற்றத்தை மாத்திரம் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆயினும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது, எரிபொருள் அதிகரிப்பு உள்ளிட்ட 12 விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு குறித்த கட்டண திருத்தத்திற்கான கணிப்பீட்டை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு சில சங்கங்கள் பஸ் கட்டணங்களை 20% ஆக அதிகரிக்க வேண்டுமெனவும் ஒரு சில சங்கங்கள் அதனை 30%ஆக அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேற்படி 12 விடயங்களின் அடிப்படையில், 32.04% ஆக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆயினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டண அதிரிப்பு கணக்கெடுப்புக்கமைய 24.76% ஆக அதிகரிக்க வேண்டிய நிலையில், டொலர் விலை அதிகரிப்பு, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு ஏனைய விடயங்களை கருத்திற் கொண்டு, அப்போதைய போக்குவரத்து அமைச்சரின் அனுமதியுடன் மேலதிகமாக 10.24% அதிகரிப்புடன் பஸ் கட்டணத்தை 35% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்போது வருடாந்தம் ஜூலை 01ஆம் திகதி மேற்கொள்ளும் கட்டண அதிகரிப்பில் மேற்படி 10.24% கட்டணத்தை குறைப்பதாக சங்கங்கள் ஒத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போது கணக்கெடுக்கப்பட்ட பஸ் கட்டண அதிகரிப்புக்கமைய 32.04% இலிருந்து ஏப்ரல் மாதம் மேலதிகமாக அதிகரிக்ப்பட்ட 10.24% இனை கழிக்கும் போது அது 21.80% ஆக வருவதன் அடிப்படையில் அதனை கிட்டிய பெறுமானத்திற்கு மட்டிட்டு பஸ் கட்டணத்தை 22% ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், குறைந்தபட்ச கட்டணத்தை 22% ஆக அதிகரிக்கும்போது ரூ. 39.04 ஆக அமைகின்ற நிலையில், பிரயோக ரீதியாக அதனை ரூ. 40 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இக்கட்டண அதிகரிப்பு, இன்று நள்ளிரவு முதல், அதாவது ஜூலை 01ஆம் திகதி முதல், தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், சாதாரண சேவை, அரைச் சொகுசு, சொகுசு, அதி சொகுசு சேவைகள் ஆகிய அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

PDF File: 

Add new comment

Or log in with...