அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் ஜனவரியில் ஆரம்பம்

- மேல் மாகாணம், தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் பின்னர் அறிவிப்பு
- சிற்றுண்டிச்சாலை திறப்பு தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசனை
- தற்போது திறந்துள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 24 விடுமுறை

எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் பின்பற்றியவாறு இவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, இன்றையதினம் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய மேல் மாகாணம் மற்றும் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி தரம் 1 - 5 வரையான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை திறக்கவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, தரம் 6-11 வரையான தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை நிறைவடைந்து, புதிய தவணையின் ஆரம்பத்தைத் தொடர்ந்து தரம் 1 முதல் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை இவ்வாறு ஆரம்பிக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், தற்போது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் டிசம்பரம் 24ஆம் திகதியுடன் 3ஆம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஏனைய பாடசாலைகளை திறப்பது தொடர்பில் 10 நாட்களுக்கு ஒருமுறை சுகாதார நிலைமைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரவுள்ளதாகவும், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை முக்கிய விடயமாக கருதி செயற்பட வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், புதிய தவணைக்காக ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய விதம் தொடர்பில், கல்வி அமைச்சு உரிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்காக, சுகாதாரபாதுகாப்பு உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்காக, இரு கட்டங்களில் மொத்தமாக ரூ 105 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், UNICEF நிறுவனம் 1,393 உடல் வெப்ப அளவீட்டு கருவிகளையும், உலக சுகாதார நிறுவனம் 1,000 உடல் வெப்ப அளவீட்டு கருவிகளையும் வழங்க இணங்கியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் சுகாதாரபாதுகாப்பு தொடர்பில் கலவி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள, 2020-05-11 திகதியிடப்பட்ட 15/2020 எனும் சுற்றுநிருபத்திற்கு அமையவும், 2019/2 எனும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு சுற்றறிக்கைக்கு அமையவும், 2020-11-09 திகதியிடப்பட்ட ஆலோசனைக் கடிதத்திற்கு அமையவும், பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கமைய, இரு வாரங்களுக்கு ஒருமுறை சுகாதார மேம்பாட்டுக் குழு கூடி, பாடசாலையின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகளை திட்டமிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலை திறப்பு தொடர்பில் முடிவெடுப்பது தொடர்பில், தொடர்ந்தும் கலந்தாலோசிக்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

ஆயினும் பாடசாலை விடுதிகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை, சமூக இடைவெளியைப் பேணியவாறு திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, யாராவது ஒரு மாணவன் சுகவீனமடையும் நிலையில் அல்லது அவரது வீட்டிலுள்ளவர் நோய்வாய்ப்படும் நிலையில் அல்லது PCR சோதனைக்கு முகம்கொடுத்து அதன் முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவ்வாறான வீடுகளிலுள்ள மாணவர்கள் பாடசாலைக்கு அனுப்பாதிருப்பது பெற்றோரின் கடமையாகும் என, அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...