வாக்காளர்களுக்கு போக்குவரத்து; மங்கள சமரவீர CIDயில் வாக்குமூலம்

வாக்காளர்களுக்கு போக்குவரத்து; மங்கள சமரவீர CIDயில் வாக்குமூலம்-Mangala Samaraweera Appear Before CID-Transporting Vanni Voters on Presidential Poll Day

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியுமான ரிஷாட் பதியுதீன் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், நிதியமைச்சின் ஒப்புதலுடனும், தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடனும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு, அவரைக் கைது செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்க சென்ற பஸ்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...