மொபைல் பண பரிமாற்ற மோசடி; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

மொபைல் பண பரிமாற்ற மோசடி; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை-Phone Scammers-Threatning-E wallet Scam-Defence Ministry Warning

- பொலிசார் போன்று பாசாங்கு
- சிறைச்சாலைகல் இருந்தவாறு மோசடி
- விசாரணைகளுக்கு உத்தரவு

மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் இ-வாலட் (e-Wallet) பணப் பரிமாற்ற முறை மற்றும் தனிநபர்கள் அச்சுறுத்தல் மூலம் கப்பம் பெறல் போன்ற மோசடி நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

தற்போது நடைபெற்று வரும் சில குற்றவியல் விசாரணைகளில் இருந்து தமது பெயர்களை நீக்க பணம் செலுத்துமாறு கோரி மொபைல் அடிப்படையிலான பண பரிமாற்ற மோசடியில் திட்டமிட்ட அடிப்படையில் கும்பல் ஈடுப்பட்டு வருவது தொடர்பாக அறியக் கிடைத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டத்தில் பொலிஸாரினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பொலிஸாரின் தகவலின் படி இந்த மோசடிக் கும்பல் சில நபர்களுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தி 25,000 முதல் 50,000 ரூபா வரையான  தொகையினை தங்களது கணக்கில் வைப்பில் இடுவதற்கு மொபைல் பண பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்துமாறு கோரி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொபைல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி கப்பம் பெறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில்  நாம் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம், இருப்பினும், இந்த மோசடிகள் தொடர்பாக பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும், ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிக் கும்பல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இருந்து சிலரது பெயரினை நீக்க மொபைல் டிஜிட்டல் பண பரிமாற்ற முறையைப் பயன்படுத்தி ரூ.25,000 ஐ செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலிலுள்ள சந்தேக நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பணத்தை மோசடியாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொலிஸார் போன்று நடித்து, பாசாங்கு செய்து மொபைல் பண பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி அதிக தொகையை செலுத்தும்படி கோரியுள்ளனர். சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே இது போன்ற  மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுப்படுபவர்கள் தொடர்பில்  தகவல் தெரியும்பட்சத்தில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அல்லது 119 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம்  கோருகிறது.

இது போன்ற மோசடிகளில் ஈடுப்படுகின்ற கும்பல் மற்றும் இந்த மோசடிகளுடன்  தொடர்பு வைத்துள்ளவர்கள் மீது பாதுகாப்பு அமைச்சு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...