Home » 225 கி.கி. போதைப்பொருள் மீட்பு; தென் பகுதி கடல் பகுதி தீவிர கண்காணிப்பில்!
1000kg போதைப்பொருள் படகு இலங்கை நோக்கி

225 கி.கி. போதைப்பொருள் மீட்பு; தென் பகுதி கடல் பகுதி தீவிர கண்காணிப்பில்!

- மேலுமொரு தொகையை கைப்பற்ற ரோந்துப்பணி மும்முரம்

by damith
October 24, 2023 6:50 am 0 comment

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், ரூ. 4,000 மில்லியன் பெறுமதியான 225 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ்போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரே நாட்டுக்கு கொண்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கிணங்க கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்து காலிக்கு மேற்கே 168 கிலோ மீற்றர் தூர கடற்பரப்பில் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போதே இவை கைப்பற்றப்பட்டன.

“தெவுந்தர தமிழ்” மற்றும் “பெபொல்களு” ஆகிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பாதாளக்குழுவைச் சேர்ந்த குற்றவாளிகள் இருவரே இந்த போதைப்பொருளை ஓடர் செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் பூசா அதிபாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கையடக்கத் தொலைபேசிகளை உபயோகித்து போதைப்பொருள் வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படையினரின் அதி தீவிர கண்காணிப்பை அடுத்தே, இவ்விருவரும் பெருந்தொகை போதைப்பொருளை ஓடர் செய்திருந்த தகவல் கிடைத்துள்ளது.

தெவுந்தர தமிழ் என்பவர் நாட்டிலுள்ள பாரிய வர்த்தகராவாரென பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. பாகிஸ்தானிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரினால் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் ஆயிரம் கிலோ அல்லது அதற்கு அண்மித்த தொகையைக் கொண்ட படகு இலங்கையிலுள்ள வர்த்தகர்களுக்கு வழங்குவதற்காக இலங்கையை அண்மித்த சர்வதேச கடல் எல்லையில் கொண்டுவரப்பட்டள்ளது. இந்நிலையில் அதில் ஒரு பகுதியே நேற்று முன்தினம் ஆழ்கடல் மீன்பிடிப்படகொன்றில் கொண்டுவரப்பட்டிருந்தது.

கைப்பற்றப்பட்டதைத் தவிர, மீதமானவை வேறு போதைப்பொருள் வர்த்தகர்களின் ஓடர்களுக்க இணங்க வேறு படகுகளில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதில் ஒரு படகை இன்று அல்லது நாளை கைப்பற்ற முடியும் என்றும் அந்த நடவடிக்கைகளில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

அந்தப் படகுகளில் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட தொகையை விட அதிகளவு போதைப் பொருட்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.போதைப் பொருட்களை கைப்பற்றிய படையினர் சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT