Home » மின் தேவையை நிறைவேற்றும் புதிய மின்னுற்பத்தி திட்டங்கள்

மின் தேவையை நிறைவேற்றும் புதிய மின்னுற்பத்தி திட்டங்கள்

by Rizwan Segu Mohideen
November 27, 2023 7:04 am 0 comment

இலங்கையில் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அத்தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் முக்கியத்துவமும் தேவையும் பெரிதும் உணரப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரமானது, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக வீட்டு பாவனை முதல் கைத்தொழில் துறை உட்பட அனைத்துக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக விளங்குகிறது மின்சக்தி.

அதனால் இந்நாட்டின் மின்தேவையை நிறைவேற்றுவதற்கு நீர், நிலக்கரி, டீசல், காற்றாலை என்பவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் மின்தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதன் விளைவாகவே நாட்டின் மின்தேவையை நிறைவேற்றவென தனியார் துறையினரிடமிருந்து அதிக விலைக்கு மின்சக்தியை கொள்வனவு செய்து குறைந்த விலையில் பாவனையாளருக்கு அதனை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை மின்சார சபை நஷ்டத்திற்கு உள்ளாக இதுவும் ஒரு முக்கிய காரணியாகும். நாட்டினதும் மின்சக்தி பாவனையாளர்களதும் மின் தேவையை நிறைவேற்றவே அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

அதன் விளைவாக மின்சார சபை முகம் கொடுக்கும் நஷ்டத்தை குறைத்து கட்டுப்படுத்தும் நோக்கில் மின்கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதனால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமைகளைக் குறைக்கும் வகையிலான நிவாரணத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவே செய்கின்றன.

இந்நாட்டில் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்தக் கூடிய நீர், காற்றாலை, சூரிய சக்தி, கடலலை என்பன இயற்கையாகவே தாராளமாகக் கிடைக்கப் பெறுகின்றன. இந்த வளங்களை ஒழுங்குமுறையாகவும் சீராகவும் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொண்டால் இந்நாட்டின் மின்தேவையை எவ்வித குறைபாடுகளும் இன்றி தீர்த்து வைக்க முடியும். அதுவே மின்துறை நிபுணர்களின் கருத்தாகும்.

இந்நிலையில் நாட்டின் மின்தேவையைக் குறைவின்றி தொடராக வழங்க வழிவகை செய்யும் வகையில் மேலும் ஆறு புதிய மின்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளன. இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மின்சக்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது, ‘மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம், யாழ், பூநகரி மின்னுற்பத்தி திட்டம், சம்பூர் அனல் மின்னுற்பத்தி திட்டம், மட்டக்களப்பு ஓட்டமாவடி மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட ஆறு மின்னுற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் தொடக்கி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

‘நாட்டின் மின் தேவைக்கு ஏற்ப மின்னுற்பத்தி நிலையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அதுதான் உண்மை. இந்நாட்டில் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கை வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி இருந்தால் மின்தேவையை இடையூறுகள் இன்றி நிறைவேற்ற முடிந்திருக்கும்.

நாட்டின் மின் தேவையயை நிறைவேற்றும் வகையில் புதிய மின் திட்டங்களை ஆரம்பிக்க முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையாகும். அதுவே நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கரை கொண்டுள்ளவர்களின் கருத்து ஆகும்.

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் அபிவிருத்திக்கு மின்சக்தி அதிக பங்களிப்பை அளிக்கக் கூடியதாகும். இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மையும் கூட. அதன் காரணத்தினால் மின்சக்தியின் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்ந்து செயற்பட வேண்டிய தேவை பரவலாக எழுந்துள்ளது.

மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போது அதனை இடையூறுகள் இன்றி 24 மணித்தியாலமும் தொடராக வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் நிலவவே செய்கிறது. அதனால் புதிய மின்னுற்பத்தி நிலையங்களின் தேவை இன்றியமையாததாகும்.

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டுள்ள இந்நாட்டின் மின்தேவையை இடையூறுகள் இன்றி தொடராக வழங்க வேண்டும். அது நியாயமான கட்டணத்தில் கிடைக்கப்பெறவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

ஆகவே நாட்டின் மின்தேவையை நிறைவேற்றக் கூடியதாக புதிய மின்திட்டங்கள் அமையும் என்ற நம்பிக்கையும் அவை தமக்கு நிவாரணங்கள் கிடைக்கப்பெற வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் காணப்படுகின்றன. அதற்கு ஏற்ப இத்திட்டங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரதும் விருப்பமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT