கொட்டதெனியாவவில் காணாமல் போன சிறுவர்கள் மீரிகமை பொலிஸில் ஒப்படைப்பு

கொட்டதெனியாவவில் காணாமல் போன சிறுவர்கள் மீரிகமை பொலிஸில் ஒப்படைப்பு-2-Boys-Aged-10-12-Went Missing on November 23 Found at Mirigama Area

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாந்துராகொட பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர் முறையிலான இரு சகோதரர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12 வயதுடைய குறித்த சிறுவர்கள், கடந்த நவம்பர் 23ஆம் திகதி முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான உதவியை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியிருந்தனர்.

அதற்கமைய, சுமார் 45 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரையும், பெண் ஒருவர் மீரிகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் நேற்று (05) இரவு மீரிகமை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு உணவு பெற வந்துள்ளதோடு, குறித்த வர்த்தக நிலையத்தின் பெண், குறித்த இரு சிறுவர்களையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கி, அவர்களைப் பற்றி கேட்டறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று (06) காலை மீரிகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது குறித்த இரு சிறுவர்களும் கொட்டதெனியாவவில் காணாமல் போன சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இரு சிறுவர்களும் எவ்வாறு காணாமல் போனார்கள், குறித்த காலப் பகுதியில் அவர்கள் இருந்த இடங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பிரிவு மற்றும் கொட்டதெனியாவ பொலிஸார் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.


Add new comment

Or log in with...