இலங்கையில்‌ அவசர கொவிட்‌-19 உதவிக்காக அமெரிக்காவினால் மேலதிக 2.5 மில். டொலர்கள்

இலங்கையில்‌ அவசர கொவிட்‌-19 உதவிக்காக அமெரிக்காவினால் மேலதிக 2.5 மில். டொலர்கள்-United States Provides Additional $2.5 Million for Urgent COVID-19 Assistance in Sri Lanka

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கைக்கு மேலதிக 2.5 மில்லியன்‌ டொலர்களை அவசர கொவிட்‌-19 உதவியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த உதவியானது பாதுகாப்பான மற்றும்‌ பயனுறுதியுள்ள கொவிட்‌-19 தடுப்பூசியேற்றல்களுக்கான சமமான அணுகலைத்‌ துரிதப்படுத்தும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 இனை எதிர்கொள்வதற்கான சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ திறனை வலுப்படுத்துமென, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை மற்றும்‌ மாலைதீவுக்கான (USAID) செயற்பணி பணிப்பாளர் ரீட்‌ ஈஷ்லிமேன்‌ இது தொடர்பில் தெரிவிக்கையில், “கொவிட்‌-19 இனை எதிர்கொள்வதற்கு சமூக, மாகாண மற்றும்‌ தேசிய மட்டங்களில்‌ உள்ள பங்குதாரர்களுடன்‌ அமெரிக்கா கைகோர்த்து செயற்படுகிறது. இந்த மேலதிக நன்கொடை சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும்‌, சுகாதாரப்‌ பணியாளர்களுக்கு உதவிசெய்யும்‌ மற்றும்‌ தடுப்பூசியேற்றலுக்கான அணுகலை மேம்படுத்தும்‌.” என்றார்‌.

அமெரிக்க மீட்புத்‌ திட்ட நிதியிலிருந்தான இந்த 2.5 மில்லியன்‌ டொலர்கள்‌ இலங்கையில்‌ ஒக்ஸிஜன்‌ சுற்றுச்சூழல்‌ அமைப்பை வலுப்படுத்தவும்‌, சுகாதாரப்‌ பராமரிப்பு நிலையங்களில்‌ நோய்த்தொற்றினைக்‌ கட்டுப்படுத்துவதற்கான தனிநபர்‌ பாதுகாப்பு உபகரணத்‌ தொகுதிகளை வழங்கவும்‌ மற்றும்‌ சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ தாங்குதிறனை வலுப்படுத்தவும்‌ உதவும்‌. தடுப்பூசி விநியோகத்தை ஒருங்கிணைத்தல்‌, பைசர்‌ தடுப்பூசிகளுக்கான சங்கிலித்தொடர்‌ குளிர்சாதன வசதியினை வழங்குதல்‌, மற்றும்‌ தடுப்பூசி நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதற்கான ஊழியர்களின்‌ திறனை வலுப்படுத்துதல்‌ போன்ற நடவடிக்கைகளுக்காகவும்‌ இலங்கையின்‌ சுகாதார அமைச்சு இந்த உதவியைப்‌ பயன்படுத்தும்‌.

2020, மார்ச்‌ மாதத்தில்‌ இப்பெருந்தொற்று முதன்முதலில்‌ தோன்றியதிலிருந்து USAID இலங்கைக்கு 17.9 மில்லியன்‌ டொலர்களை பங்களிப்பாக வழங்கியுள்ளது. கொவிட்‌-19 பரவலைக்‌ கட்டுப்படுத்துவதற்காகவும்‌, இலங்கையர்களின்‌ அவசர சுகாதாரத்‌ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும்‌, இப்பெருந்தொற்றின்‌ எதிர்மறையான பொருளாதாரத்‌ தாக்கங்களைத்‌ தணிப்பதற்காகவுமான இந்த உதவிகள்‌ நாடு முழுவதுமுள்ள மில்லியன்‌ கணக்கான இலங்கையர்களைச்‌ சென்றடைந்துள்ளது.

இம்முயற்சிகள்‌, பல தசாப்தகால உயிர்களைக்‌ காக்கும்‌ பணி மற்றும்‌ இபோலா, எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌, காசநோய்‌, மலேரியா மற்றும்‌ தற்போது கொவிட்‌-19 போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிகளைக்‌ கையாள்வதில்‌ அமெரிக்காவின்‌ தலைமை ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ அமைந்துள்ளன. கொவிட்‌-19 பெருந்தொற்றினை முடிவுக்குக்‌ கொண்டுவருவதற்கும்‌, அதன்‌ பேரழிவுடைய சமூக மற்றும்‌ பொருளாதார தாக்கங்களைத்‌ தணிப்பதற்கும்‌, மற்றும்‌ எதிர்கால நோய்ப்பரவல்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறப்பாகத்‌ தயார்‌ நிலையிலுள்ள ஒரு உலகைக்‌ கட்டியெழுப்புவதற்கும்‌ இலங்கையுடன்‌ இணைந்து பணியாற்றுவதில்‌ அமெரிக்கா உறுதியாக உள்ளது.