ஹேமசிறி, பூஜித்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள்

ஹேமசிறி, பூஜித்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள்-3 Bench Judge Appointed by CJ-Case Against Pujith-Hemasiri-Easter Sunday Attack

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரிக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக மேல் நீதிமன்ற நீதிபதிகளான நாமல் பலல்லே, ஆதித்யா பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷடீன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசேட வழக்காக கருதி, நடுவர் மன்றம் இல்லாத மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரிக்குமாறு சட்ட மாஅதிபர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த, பிரதம நீதியரசர், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், கடந்த 2021 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் அலட்சியம் மற்றும் கொலை உள்ளிட்ட 864 குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த  இருவருக்கும் எதிராக சட்ட மாஅதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...