கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம்

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம்-Pottuvil to Polikandy Protest-Rally-Begins

- தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
- ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில்-பொலிகண்டி பேரணி திட்டமிட்டபடி இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.

பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் தடைகள் மறிப்புகள் இருந்தன. அத்தனை தடைகளையும் தாண்டி இப்பேரணி நடைபெற்றுவருகிறது.

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணிஆரம்பம்-Pottuvil to Polikandy Protest-Rally-Begins

பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கனமழை பெய்த பொழுதிலும் அனைவரும் நனைந்தவண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் இரா. சாணக்கியன், த. கலையரசன் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. சிறிநேசன், சி.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் சமயத்தவைர்கள் சிவில் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணிஆரம்பம்-Pottuvil to Polikandy Protest-Rally-Begins

இன்றைய போராட்டத்தில் சாணக்கியனுக்கு தடை

இதேவேளை, இவ்வார்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பிற்குள் போராட்டங்களை நடத்த மட்டக்களப்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அத்துடன், இது தொடர்பான அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணிஆரம்பம்-Pottuvil to Polikandy Protest-Rally-Begins

அந்த வகையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று (03) நாடவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டம், வாகனத்தொடரணி என்பவற்றினை கொரோனா மற்றும் சட்டவிரோத கூட்டம் எனக் குற்றஞ்சாட்டி அந்தந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் பிரிவு 106(1) இன் கீழ் தடையுத்தரவுகள் பெறப்பட்டு வரும் நிலையில் கோப்பாய் பொலிஸாரும் வழக்கொன்றை யாழ் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.

ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணிஆரம்பம்-Pottuvil to Polikandy Protest-Rally-Beginsபொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்த் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த வகையில், தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், இன்று (03) தொடங்கி, 06ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

(காரைதீவு குறூப் நிருபர் - வி.ரி. சகாதேவராஜா, முல்லைத்தீவு குறூப் நிருபர் - என். கிருஷ்ணகுமார், சண்முகம் தவசீலன்)


Add new comment

Or log in with...