இலங்கையர்களை அழைத்து வருதல் இடைநிறுத்தம்

- தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அத்மிரால் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையும் இதற்கொரு காரணமாகும் எனவும், அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானங்களின் நேர அட்டவணை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இதுவரையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு 57,000 இற்கும் அதிகளவானோர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.


Add new comment

Or log in with...