கல்வி நிறுவனங்களை திறக்க முன் டெங்கை ஒழிக்கவும் | தினகரன்


கல்வி நிறுவனங்களை திறக்க முன் டெங்கை ஒழிக்கவும்

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரிய அதிகாரிகளுக்கு, கல்வி அமைச்சு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது. 

பாடசாலைகள், பிரிவெனா பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். டெங்குத் தொற்றிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, கல்வி அமைச்சு தெரிவித்தது.

பாடசாலைகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பூந்தோட்டங்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஏனைய கல்வி சாரா பணியாளர்கள் ஆகியோர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அத்தோடு, அனைத்து பாடசாலைகளையும் டெங்கற்ற வலயமாக மாற்றுவதற்காக  மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அதிபர்கள், பழைய மாணவர் சங்கங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
 


Add new comment

Or log in with...