ஜனாதிபதி யார் என்பதை முஸ்லிம்களே தீர்மானிப்பார்கள் | தினகரன்


ஜனாதிபதி யார் என்பதை முஸ்லிம்களே தீர்மானிப்பார்கள்

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே நான் இத்தேர்தலில் போட்டி

எந்த அரசாங்கம் வந்தாலும் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பொத்துவில் நகரில் நேற்றுமுன்தினம் (27) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதியை முஸ்லிம்களே தீர்மானிப்பார்கள். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே நான் இத் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் இக்கால கட்டத்தில் அவர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் மாற்றத்தை கொண்டு வந்திருப்பார்.

முஸ்லிம்கள் எனக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்.

நான் எந்த ஜனாதிபதி வேட்பாளருடனும் எந்தவித ஒப்பந்தங்களும் செய்யாது சுயமாக போட்டியிடுகின்றேன். முஸ்லிம்களின் வாக்குகளால் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனில் செயற்படாது மாறாக சமூகத்தை அழிக்கும் செயற்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அரசாங்கமோ எதுவும் செய்யவில்லை. மாறாக முஸ்லிம்கள் பல அழிவுகளை எதிர்கொண்டார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையான அழிவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதனை மாற்றுவதற்கு முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். இவருடைய ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களாகவே உள்ளார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காணப்படுகின்றது. இதனை தீர்த்து வைப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

நான் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த போது முஸ்லிம்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த வேளையில் பெரும்பான்மை சமூகத்தினரால் அவை தடுக்கப்பட்டது. தற்போது எமது முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பான எவ்வித ஒப்பந்தங்களும் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

தமிழ், சிங்கள மக்கள் என்னை விமர்சிக்கவில்லை. முஸ்லிம் தலைவர்கள் என்னை முஸ்லிம் விரோதியாக விமர்சிக்கின்றார்கள். இந்த சமூகம் தொடர்ந்து அடிமையாக வாழ முடியாது.

இத் தேத்தலில் ஒட்டகச் சின்னத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை நிம்மதியாகவும் சம அந்தஸ்துடனும் வாழ வைக்கும் என்றார்.

ஒலுவில் விசேட நிருபர்


Add new comment

Or log in with...