Sunday, April 28, 2024
Home » ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் கெய்ரோ விரைவு

ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் கெய்ரோ விரைவு

எகிப்து எல்லையில் பலஸ்தீனர்கள் இறுதி அடைக்கலம்

by Gayan Abeykoon
February 15, 2024 9:54 am 0 comment

 காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா நகர் மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை குறித்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.  

கெய்ரோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்களை எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து இந்த மத்தியஸ்தர்களுடன் பேசுவதற்காக ஹமாஸ் தூதுக் குழு ஒன்று நேற்று கெய்ரோ பயணித்ததாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலை கடுமையாக சாடி வரும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானும் நேற்று எகிப்து பயணமானார். அவர் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் அல் சிசியை சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம்ஸ் பேர்ன் கடந்த செவ்வாயன்று கெய்ரோவில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இணைந்தார். இதில் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பெர்னியும் பங்கேற்றிருந்தார். இந்தப் பேச்சுகள் சாதகமாக இருப்பதாக எகிப்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாகவும் சரியான திசையில் நகர்வதாகவும் அமெரிக்க பாதுகாப்பு கெளன்சில் பேச்சாளர் ஜோர் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகர் மீது இஸ்ரேல் முழு வீச்சில் படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கத் தயாராகும் நிலையில் அதற்கு முன்னதாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரபா மீதான தாக்குதல் பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய நட்டுபு நாடான அமெரிக்கா கூட எச்சரித்துள்ளது. நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் அந்தப் படை இன்னும் நுழையாத ஒரே பிரதான நகராகவே ரபா உள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான “நம்பகமான திட்டம்” ஒன்று இன்றி ரபாவில் இஸ்ரேலின் தரைவழி நடவடிக்கையை ஆதரிக்கப்போவதில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

காசாவுக்கான நிவாரணம் செல்லும் வாயிலாக ரபா இருப்பதோடு இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் மனிதாபிமான பேரழிவு ஒன்று ஏற்படும் என்று ஐ.நா நிறுவனம் எச்சரித்துள்ளது.

ரபாவில் இடம்பெறும் எந்த ஒரு இராணுவ நடவடிக்கையும் படுகொலைகளுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்டின் கிரிபித்ஸ் எச்சரிதுள்ளார்.

எகிப்து எல்லையில் காத்திருப்பு

பீதியடைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர்.

“எனது மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர், நான் எங்கு போவது?” என்று ரபா நகரின் எகிப்துடனான எல்லைக் கடவைக்கு அருகில் தங்கியிருக்கும் டானா அபூ சாபன் தெரிவித்துள்ளார். காயங்களால் கட்டுப் போடப்பட்ட மகன்களுடன் எகிப்து செல்ல அனுமதிக்கப்படும் எதிர்பார்ப்புடனேயே அவர் அந்த எல்லையில் காத்திருக்கிறார்.

எகிப்து எல்லையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடாரங்களை அமைத்திருக்கும் நிலையில் அங்கு உணவு மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு எல்லையை திறந்து விடுவதற்கு எகிப்துக்கும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

எனினும் காசா மக்களுக்கு எகிப்து எல்லை தொடர்ந்து முடப்பட்டுள்ளது. “இந்த எல்லை கடவையில் நாம் 100 நாட்களாக இருக்கிறோம். எல்லையை கடப்பதற்கு அல்லது எமக்கு உதவுவதற்கு அவர்களை நாம் மன்றாடுகிறோம்” என்று ஹபிபா நகாலா என்பவர் தெரிவித்துள்ளார்.

ரபாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எனினும் ரபாவில் உள்ள ஹமாஸின் கடைசி படைப்பிரிவை ஒழிக்காமல் முழுமையான வெற்றி ஒன்றை அடைய முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நீடித்தபோதும், காசாவில் இஸ்ரேலின் குண்டு மழை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் இரவு இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பாதுகாப்பு கெமரா ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. இதில் காசாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒக்டோபர் 7 ஆம் திகதி இந்த போர் வெடித்ததை அடுத்து சில நாட்களில் சுரங்கப் பாதை வழியாக தப்பிச் செல்வது பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயிருடன் அல்லது சடலமாக பிடிக்கப்படும் வரை தேடுதல் வேட்டை தொடரும்” என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் சிலர் ஏற்கனவே தமது உடைமைகளை பொதியிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர். எனினும் இஸ்லேின் தாக்குதல்கள் தீவிரமடைந்து உயிராபத்து அதிகரித்திருந்தபோதும் மேலும் சிலர் அங்கேயே தங்கி இருக்க உறுதியாக உள்ளனர்

காசா நகரில் தங்கியுள்ள தமது உறவினர்கள் எதிர்கொள்ளும் பஞ்சத்துக்கு மத்தியில் அந்த நகருக்கு திரும்புவதை விடவும் ரபாவில் உயிரிழப்பது மேல் என்று அலம் அபூ அசி என்பவர் கூறுகிறார்.

“எனது மகன் மற்றும் அவனது குழந்தைகளுக்கு உண்பதற்கு எதுவும் இல்லை. அவர்கள் கொஞ்சமாக அரசியை சமைத்தும் அடுத்த நாளைக்கு சேமித்தும் வருகிறார்கள்” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறிய அவர் “எமது பேரக்குழந்தைகள் பசியால் அழுகின்றனர்” என்றார்.

“ரபாவை விரைவில் ஆக்கிரமிக்கப்போவதாக இஸ்ரேல் கூறியது தொடக்கம், ஒவ்வொரு இரவும் நாம் எமது கடைசி தொழுகையை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு இரவிலும் நாம் ஒவ்வொருவருக்கு இடையிலும் ரபாவுக்கு வெளியில் இருக்கும் உறவினர்களுக்கும் பிரியாவிடை கூறி வருகிறோம்” என்று 30 வயதான ஆயா என்பவர் தெரிவித்தார். இவர் தனது தாய் மற்றும் பாட்டி மற்றும் ஐந்து உடன்பிறந்தவர்களுடன் ரபாவில் கூடாரம் ஒன்றில் இருந்து வருகிறார்.

உயிரிழப்பு 28,576 ஆக உயர்வு

இந்நிலையில் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் இருக்கும் 300 மருத்துவ பணியாளர்கள், 450 நோயாளர்கள் மற்றும் அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் வடக்கு வாயிலை தகர்த்திருக்கும் இஸ்ரேலியப் படை அதனை மணல் மூட்டைகள் மற்றும் இடிபாடுகளைக் கொண்டு மூடியுள்ளது. மருத்துவமனையின் கிழக்கு வாயில் மாத்திரமே தற்போது திறந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாயிலுக்கு முன்னால் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிலைகொண்டுள்ளன. அங்கு ஆள் அடையாள கெமராக்களையும் இஸ்ரேலிய படை பொருத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா நகரில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக வபா செய்தி நிறுவனம் கூறியது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,576 ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதில் 12,300க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் சுமார் 8,400 பெண்கள் அடங்குகின்றனர்.

காசாவில் நீடிக்கும் போர் பிராந்தியம் எங்கும் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லெபனானில் இருந்து நேற்று இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் ஹரட்ஸ் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டது.

வடக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத் தளம் ஒன்றை இலக்கு வைத்தே இந்த ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிய படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT