Friday, April 26, 2024
Home » மண்வாசனை வீசும் படைப்புகளை வழங்கிய கலாநிதி அமரர் கலாமணி

மண்வாசனை வீசும் படைப்புகளை வழங்கிய கலாநிதி அமரர் கலாமணி

by damith
February 13, 2024 12:17 pm 0 comment

யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை ஆசானாகிய கலாநிதி தம்பிஐயா கலாமணி (1952.02.04) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த பிரபல்யமான நாடகக் கலைஞரும் ஆவார். பேராதனை பல்கலைக்கழக பௌதிகவியற் பட்டதாரியன இவர், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘நாட்கள், கணங்கள் நமது வாழ்க்கை’ என்பதாகும். இவர் ‘ஒப்பிலாமணியே’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். 1974 முதல் சிறுகதை எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

வடமராட்சியின் மூத்த விருட்சமாக என்றும் விளங்கும் கலாமணி ஆசான் படைத்த படைப்புக்கள் பல. அவற்றுள் அம்மாவின் உலகம், இலக்கியமும் உளவியலும், இளையோர் இசை நாடகம், ஏனிந்தத் தேவாசுர யுத்தம், காலநதியின் கற்குழிவு, ஜீவநதி நேர்காணல்கள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

அல்வாய் மண்ணின் அகள்விளக்காக ஒளிவீசிய ஆசான் கலாமணியின் திரு ஊஞ்சல்- கொற்றாவத்தை சிறப்பாவளை அவதாரக் கண்ணன் ஸ்ரீ ரமணன் திருவுடையாள்: பிரதேசமலர் 2011, நதியில் விளையாடி, நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள், பாட்டுத் திறத்தாலே, புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும், பெளதிக விஞ்ஞானக் கலைச்சொற்கள், மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல், வடமராட்சி வலயக்கல்விச் சமூகம் முன்னெடுக்கும் ஆசிரியர் மகாநாடு 2016 ஆகியன இவரது மண்வாசம் வீசும் நூல்களாகும்.

அண்மையில் கலாமணியின் மைந்தன் பரணீதரனுடன் ஆசானின் முன்னுரைகளை தொகுத்து நூலாக்க வேண்டும் என கலந்துரையாடினோம். அவர் வாழும் போதே நூலாக்க வேண்டும் என முயன்றோம். எனினும் அவருக்கு சமர்ப்பணமாக அந்நூல் விரைவில் வெளிவரும்.

மனோகரா நாடகசபாவின் இயக்குனரான இவர், வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஸ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது சிறுகதை நூலுக்கு, அன்றைய வடக்கு,- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மண்வாசனை வீசும் எழுத்தை தன் உயிராக நேசித்த அல்வாயின் விளக்கு கலாமணி கடந்த 2024,பெப்ரவரி 9 இல் காலமானார். வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சமான கலாமணி ஆசான் என்றும் புதிய தலைமுறைகளுக்கான வழிகாட்டியாய் இருப்பார்.

--ஐங்கரன் விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT