தமிழர் கூறுவதை 72 வருடமாக ஆட்சியாளர்கள் கேட்கவில்லை | தினகரன்


தமிழர் கூறுவதை 72 வருடமாக ஆட்சியாளர்கள் கேட்கவில்லை

தமிழர்களுக்கான உரித்துக்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் தமிழர்கள் சொல்வதை அரசு, அரசாங்கம் புரிந்து கொள்ளாது கடந்த 72 வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண பண்பாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

உலகத்திற்கு நன்மை செய்யும் ஒரு தேசமாகவும், உலகத்தின் நன்மை அடங்கிய ஒரு தேசமாகவும் நாங்கள் மாற வேண்டும். அதற்காக உடைந்து போயுள்ள அத்திவாரக் கற்களை ஒன்றாக இணைந்து அதன் மேல் மனித மண்டபம் கட்ட வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கை காலத்தில் பல இடங்களுக்கு போகலாம். நான் கொழும்பிலே பிறந்து வெளியூரிலே படித்து பட்டம் பெற்று வெளிநாட்டிலே வாழ்ந்து என்னுடைய வாழ்க்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழ் வைத்திருந்து கொழும்பிலே பணிபுரிந்து, கொழும்பு அரசினால் உங்களுக்கு ஆளுநராக கொடுக்கப்பட்டாலும், என்னுடைய ஆன்மா இன்னும் தமிழர்களாக இருக்கிறது.

ஆஸ்கார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் நான் தமிழனாக இருக்கின்றேன். அப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று எனக்கு வந்தது. எமது பண்பாடு என்பது வெறும் கலை, கலாசாரம் மட்டுமல்ல. நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதும் ஒரு பண்பாடு தான்.

வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து தமது நெற்றியில் சிவநெறி செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தை புரிந்தவர்கள் தமிழர்கள்.

ஆகையால் எளிமையாக வாழ நாம் அறிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். அப்படி நாம் வாழ வேண்டும். அப்படி வாழும் போது இன்னுமொருவருக்கு எங்களால் செய்யக் கூடிய நன்மை என்ன என்று யோசிக்க வேண்டும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...