Friday, April 26, 2024
Home » உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை

உலக உயிர்களை வாழவைக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை

by damith
January 15, 2024 6:06 am 0 comment

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள். ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’என்பார்கள். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் முக்கிய திருநாள் தைப்பொங்கல் ஆகும்.

மார்கழி மாதம் பிறந்து முப்பது நாட்கள் முடிந்த பின்னர் மறுநாள் தை மாதம் பிறக்கின்றது. தமிழர்களின் முக்கியமான திருநாளில் தைமாதம் முதலிடத்தைப் பிடிப்பதோடு, இது முழுமையாக சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே கருதப்பட்டு வருகின்றது.

சோதிட ரீதியாகப் பார்க்கும் போது சூரியபகவான் புதிய ராசியில் பிரவேசிக்கும் நாள் என்று கூறப்படுகின்றது. உலகத்திலுள்ள மக்களின் அன்றாட தேவைகளுள் உணவு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளின் தேவையும் உணவாகவே இருக்கின்றது. எமது மக்கள் வாழ்வதற்கு நெல் அரிசிச்சோறு தேவைப்படுகின்றது.

இதன் நிமித்தம் உழவன் தன் உடம்பை வருத்தி எல்லா மக்களுக்கும் உணவை வழங்குகின்றான் எனவே தைத்திருநாளை உழவர் திருநாள் என்றும் கூறலாம். உழவன் என்பவன் இல்லை என்றால் உலகமே பட்டினியாகும். அந்த விவசாயம் செழிக்க இயற்கை ஒத்துழைக்க வேண்டும். இயற்கை என்னும் போது சூரியபகவான் உலகுக்கு ஒளியூட்ட வேண்டும்.

தை பிறக்கும் நாளன்று எல்லா இந்துக்களின் வீடுகளிலும் அதிகாலையிலேயே துயில் எழுந்து விடுவார்கள். எமது மக்கள் மத்தியில் அக்காலத்தில் வழக்கமொன்று இருந்தது. அதிகாலை ஐந்து மணியளவில் பசுவின் சாணத்தைப் பெற்று வீட்டின் முன்வாயிலில் பூசி மெழுகுவார்கள். அதன் பின்னரே அன்றாடக் கருமங்கள் ஆரம்பமாகும். கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக மாறிய பின்னர் பாரம்பரியங்களும் மாற்றமடைந்து விட்டன.

கோலம் இடுவது ஊர்வன, எறும்பு போன்றவற்றுக்கு உணவு வழங்குவதற்காகும். வீட்டில் கோலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் கரும்பு போன்றவற்றை நிறுத்தி அதில் மாவிலை, தோரணம் என்பவற்றை தொங்கவிடுவார்கள். பின்னர் வாழையிலையில் பச்சை அரிசியைப் பரப்பி அதன் மீது நிறைகுடம் வைக்கப்படும். இரு மருங்கிலும் மங்கள விளக்கு போன்றவையும் அங்கு வைக்கப்படும்.

சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கும் போதே பொங்கல் பானை அடுப்பில் ஏற்றப்படும். இந்தப் பொங்கல் அரிசி, பயறு, சீனி, சர்க்கரை, நெய், பால் போன்றவை சேர்க்கப்பட்டு பொங்கப்படும். பொங்கல் பின்னர் படைக்கப்படும்.

அதிகாலை சூரியன் உதித்து வெளிச்சத்தைக் காணும் போது தீபாராதனை காட்டப்படும். அன்று எல்லோரும் சூரியபகவானை, அந்த இயற்கைக் கடவுளை நன்றியோடு வணங்குவார்கள். இந்நிகழ்வை சூரியபகவானுக்கான திருவிழா என்றே கூறவேண்டும்.அதே நேரம் உலகிற்கு ஒளியூட்டுபவன் என்ற வகையில் உலகில் வாழும் இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம் என்றும் ஆதவனைக் கூறலாம்.

உழவர்களின் முக்கிய திருவிழாவாக இது கொண்டாடப்படுவதுடன், உழவர்களினால் சேர்த்து வைக்கப்பட்ட புத்தரிசி இட்டு புதுமண்பானை வாங்கப்பட்டு பொங்கல் இடப்படும். இதன் போது வயலிலும் பொங்கல் வைப்பார்கள். வயல்களில் நெல்அறுவடையின் போது நெல்லானது மனிதனுக்கும், வைற்கோலானது பசுவுக்கும் போய்ச் சேருகின்றது. நிலமும் ஏங்கக் கூடாது அதனாலேயே நெல்லின் அடிப்பாகம் நிலத்தோடு விடப்படுகின்றது.

தைத்திருநாளன்று படைக்கப்பட்ட பண்டங்கள் அயல் வீட்டுக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அத்தோடு விருந்தினர்கள் சகிதம் தாங்களும் உண்டு மகிழ்வார்கள். இப்படியாக சொந்தங்களும் ஒருவருக்கு ஒருவர் உணவைப் பரிமாறிக் கொள்வார்கள். அன்று மரக்கறி உணவையே உண்பார்கள்.

தமது குடும்பத்தினர் சகிதம் கோயிலுக்குச் செல்வது இந்துக்களின் மரபாகும். புதிய ஆடை தரித்து அர்ச்சனைத் தட்டுக்களுடன் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இன்றைய தினம் இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெறுகின்றன.

தைத்திருநாளின் மறுநாளை மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடுவார்கள். அதாவது இந்து மக்கள் தாய்க்கு அடுத்தபடியாக தங்களுக்கு திரவஆகாரம் தரும் பசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால்தான் ‘கோமாதா என் குலமாதா’ என்கின்றோம்.

எமது நாட்டைப் பொறுத்தவரை கிராமங்களுக்குக் கிராமம் தைப்பொங்கல் பாரம்பரியங்கள் வித்தியாசப்படும். உலகின் பிரதான சக்திமுதலான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதை இந்துக்கள் அக்காலம் தொட்டு தங்களது பாரம்பரியமாகக் கொண்டுள்ளனர்.

-க.மகாதேவன் (உடப்பு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT