Saturday, April 27, 2024
Home » இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டி முகத்துவாரம் மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயத்தில் இன்று பிரார்த்தனை

இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டி முகத்துவாரம் மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயத்தில் இன்று பிரார்த்தனை

by damith
January 15, 2024 8:51 am 0 comment

இலங்கை தேசத்தின் சமாதானம் வேண்டி கொழும்பு_15, முகத்துவாரம் மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயத்தின் தலைமைப் போதகர் வண. ஜெயம் சாரங்கபாணி தலைமையில் இன்று (15.01.2024) காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை உபவாச ஜெப ஒன்றுகூடல் நடைபெறுகின்றது.

இந்த ஒன்றுகூடலில் மூத்த போதகர் ஒன்றியத்தினரும், சபை விசுவாசிகளும் பெருமளவில் கலந்து கொள்கின்றார்கள்.

வண. ஜெயம் சாரங்கபாணி

வண. ஜெயம் சாரங்கபாணி

2024 ஆம் ஆண்டு இலங்கையை அற்புதமாக மாற்றுவதில் இயேசு கிறிஸ்து வல்லவராயிருக்கிறார். இன, மத பேதமின்றி அனைத்து இனமக்களும் இன்றைய ஒன்றுகூடலில் கலந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள முன்வருமாறு மூத்த போதகர் ஜெயம் சாரங்கபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். உலகம் கொடுக்கின்ற பிரகாரம், நான் உங்களுக்கு கொடுக்கின்றதில்லை.பரி யோவான் (14:27) என்று கர்த்தரின் வாக்குத் தத்தம் இந்தப் புதுவருட காலத்தில் எம்மை திடப்படுத்துகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது என்று மூத்த போதகர் ஜெயம் சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது உலக சுழற்சியின் விளைவு. ஆனால் காலத்தை ஆதாயப்படுத்த வேண்டியது அவசியம். அன்று காலத்தை வீணாக்கிய எருசலேமைப் பார்த்து இயேசு, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாய் இருக்குமே என்று கலங்கினார். (லூக்கா 19:42).

ஓடி முடிந்த காலத்தில் நாம் பல்வேறு அனுபவங்களுக்கு முகம்கொடுத்திருக்கலாம். பல்லின மக்கள் வாழும் இந்த ஜனநாயக நாட்டில் வாழ்வது நமக்குப் பெருமையான விடயமே. ஆயினும் துயரங்கள், நெருக்கடிகள், சவால்கள் என்று எமது சமாதானம் குழம்பிப் போவதும் உண்டு. என் பின்னே வாருங்கள். (மத்தேயு 4:19) என்று கர்த்தரின் அழைப்பை புறக்கணிப்பதால் சாத்தான் பல்வேறு வழிகளிலும் எம்மைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதனால் நாம் சோர்வடைகின்றோம். காலத்தின் பிறப்பின் மேல் எதிர்பார்ப்பை விதைக்கின்றோம். கண்ணீர் துடைக்கப்படாதா என்று ஏங்குகிறோம். அதேநேரம் அடுத்தவர் மேல் பழியைப் போட்டுவிட்டு தப்ப நினைக்கிறோம்.

இங்கேதான் இறைவனின் அடைக்கலம் தேவைப்படுகின்றது. ஏனெனில் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்று (யோவான் 14:1) எமது மனமறிந்து ஆறுதல் தருபவர் அவர் மட்டுமே.

இதற்காக எம்மிடமிருந்து அவர் எதனை எதிர்பார்க்கிறார்?

ஒரு மணி நேரமாவது என்னோடு கூட விழித்திருக்கக் கூடாதா …’ (மத் 26:40) என்று எமது சமாதானத்துக்கான அவர் இதயம் கலங்குகிறார்.

நாம் இறைவனின் அழைப்புக்கு செவிகொடுப்போம். அதற்காக வேண்டி முகத்துவாரம் மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயம் இன்று (15ஆம் திகதி) உபவாச ஜெப ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. தை பிறந்திருக்கும் தனிச்சூழலில் இனி இல்லை இதயவேதனை என்பதை அனுபவித்து உணர அரிய வாய்ப்பு. அனைவரும் இந்த ஜெப ஒன்றுகூடலில் பங்குகொண்டு காலத்தை ஆதாயப்படுத்த ஐக்கியப்படுங்கள். நாட்டுக்கும் இங்கு வாழும் சகல இன சமூகங்களுக்கும் சமாதானம் கிடைத்திட விசுவாசத்தோடு ஜெபிப்போம்.

பூமியிலே நாங்கள் வாழ்கின்ற நாட்களையும், செலவிடும் நேரங்களையும் கர்த்தர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். மறந்து போகாதீர்கள். ஆன்மீகத் தேடலில் நாம் ஒன்றுதிரள்வோம் வாரீர்!

இயேசு கிறிஸ்து உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

மேலதிக விபரங்களுக்கு மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயம் 187/7, மோதர வீதி, கொழும்பு_15 என்ற முகவரியுடனோ அல்லது தொலைபேசி எண் 0112528355 உடனோ தொடர்பு கொள்ளுமாறு அதன் ஊடகப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT