Friday, April 26, 2024
Home » மலையக தமிழ்மக்கள் மீது இந்தியா கூடுதல் கரிசனை

மலையக தமிழ்மக்கள் மீது இந்தியா கூடுதல் கரிசனை

by damith
January 1, 2024 6:00 am 0 comment

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டும், அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலையின் ஏற்பாட்டிலும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய தபால்துறை அமைச்சினூடாக இந்த நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு நினைவுத் தபால்தலையைக் கையளித்தார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு இந்திய தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் மூலம் இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு இந்திய மக்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பூட்டான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுமார் 32,285,425 இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்ற போதிலும், இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை மலையக மக்களுக்கு அளிக்கப்படும் கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.

இதேவேளை மலையகம் மீதான அக்கறையை மேற்படி முத்திரை வெளியீடு வெளிப்படுத்துகிறது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு கடந்த 30.12.2023 அன்று நடைபெற்றது.

இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில், “இந்நிகழ்வில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையிட்டு வருந்துகின்றேன். எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி எமது கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அதேபோல பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விழா ஏற்பாடு குழுவினருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுப் பாலமாக அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் இருந்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு என்றும் நாம் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது. வீடமைப்புத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் என அந்த பட்டியலை நீடித்துக் கொண்டே செல்லலாம்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும்.

இந்நிலையில் எமது மக்களை கௌரவப்படுத்தி நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை எமது மக்கள் மீதான இந்தியாவின் கரிசனையை உறுதிப்படுத்துகின்றது.” என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT