'மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது' | தினகரன்


'மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது'

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கிய பிரதமர் மோடியின் மனதில் பயப்புயல் வீசுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஐ உயர் அதிகாரிகள் அலோக் குமார் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் இலஞ்சப் புகார் எழுப்பியதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் திகதி இரவு கட்டாய விடுமுறையில் அனுப்பியது.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது.

இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா பணியில் இணைந்தார். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மோடியின் மனதில் இப்போது பயப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. அவரால் தூங்க முடியாது.

இந்திய விமானத் துறையில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கி இருக்கிறார். இது மோடி தன்னுடைய பொய்களிலேயே சிக்கிக்கொண்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...