தீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம் | தினகரன்

தீபாவளிக்குப் பின் சபரிமலை செல்வேன்; பிரச்சினைக்கு பாஜகவினரே காரணம்

திருப்தி தேசாய் ஆவேசம்

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச் செல்வேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம் கேரளாவில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் பாஜகவினரே காரணம் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு நேற்று பிரதமர் மோடி வரவிருந்தார். அவரிடம் சபரிமலை விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் ஏன்று விளக்கம் கேட்க காரை மறிக்கப் போவதாகக் கூறிய பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சபரிமலை விவகாரத்தில் கோயிலுக்கு அனைத்துப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதற்கு அங்குள்ள கோயில் நிர்வாகமும் பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன? ஏன் மௌனம் காக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஷீரடிக்கு வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் அனுமதி மறுத்தால் அவரின் பாதுகாப்பு வாகனத்தை மறிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.சாஹர் நகர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்தி தேசாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''என்னை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அடைத்து வைத்து இருப்பதற்கு எந்தவிதமான விளக்கமும் பொலிஸார் அளிக்கவில்லை. புனே பொலிஸ் ஆணையரிடம் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது. கோயிலுக்குள் நுழைவோம் என்று சொல்லும் ஆர்வலர்களை நடத்தும் முறை இதுதானா? எங்களைக் கைது செய்வதற்குப் பதிலாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பின்பும், ஏன் பெண்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்வது கடினமாக இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

பெண் பக்தர்களையும் பெண் பத்திரிகையாளர்களையும் ஆர்வலர்களையும் கோயிலுக்குள் வராமல் தடுத்து தாக்குதல் நடத்துவது பாஜகவினர்தான். நான் சபரிமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய முயற்சித்தால் என்னைக் கொன்றுவிடுவதாக இதுவரை எனக்கு 200க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன. பேஸ்புக்கிலும் கடிதம் வாயிலாகவும் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களுக்கு நான் பணியமாட்டேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. ஆதலால் சபரிமலை கோயிலுக்குள் போவதைத் தடுக்க முடியாது. தீபாவளிப் பண்டிகை முடிந்த பின் சபரிமலை கோயிலுக்குள் செல்லத் திட்டமிட்டுள்ளேன்''.

இவ்வாறு திருப்தி தேசாய் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் அனுமதிக்கப்படாத கோயிலுக்குள் சென்று போராட்டம் நடத்தி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் திருப்தி தேசாய் தீவிரம் காட்டி வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சனிசிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெண்களை கருவறைக்குள் செல்ல அனுமதி பெற்றுக்கொடுத்தார்.

அதன்பின் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வருக்குக் கடிதம் எழுதி பெண்களை தர்ஹாவுக்குள் வழிபாடு நடத்த அனுமதி பெற்றுக் கொடுத்தது திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...