Friday, April 26, 2024
Home » உணவுகளை ஆக்கிரமித்துள்ள நச்சு இரசாயனப் பொருட்கள்!

உணவுகளை ஆக்கிரமித்துள்ள நச்சு இரசாயனப் பொருட்கள்!

by Rizwan Segu Mohideen
December 2, 2023 6:00 am 0 comment

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது அன்றைய காலத்தில் நுகர்வோர் அனுபவித்து வந்த பெரும் பிரச்சினையாகும். அன்றைய காலத்தில் மக்கள் உண்ணுகின்ற ஏராளமான பொருட்களில் கலப்படங்கள் செய்யப்பட்டன. மக்கள் தரமற்ற உணவுப் பொருட்களை உட்கொண்டது ஒருபுறமிருக்க, கடுமையாக நோய்வாய்ப்படும் நிலைமைக்கும் ஆளானார்கள்.

ஆனால் கலப்படம் என்பது காலப்போக்கில் படிப்படியாக மறைந்து போய் விட்டது. கலப்படத்துக்குப் பதிலாக உணவுப் பொருட்களை இரசாயனப் பதார்த்தங்கள் ஆள்கொள்ளத் தொடங்கின. அதுவும் எமது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் உணவுப் பொருட்களை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

இதன் விளைவினால் மனித உடல்ஆரோக்கியம் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளானது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய புற்றுநோய்கள், சிறுநீரக செயலிழப்பு, இருதய வியாதிகள் என்றெல்லாம் தொற்றாநோய்கள் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கின. அந்தப் பாதிப்புகளிலிருந்து மீள முடியாதவர்களாக மக்கள் உள்ளனர்.

நிறமூட்டிகள், சுவையூட்டிகள், மணமூட்டிகள் மற்றும் உணவைப் பழுதுபடாமல் பாதுகாத்து வைத்திருக்கக் கூடிய இரசாயனங்கள் என்றெல்லாம் எமது அன்றாட உணவுப் பொருட்களில் இடம்பிடித்துள்ள இரசாயனங்கள் இன்று ஏராளம்.

வெள்ளைநிற அரிசியை தவிட்டு அரிசியாக்கிக் காட்டுவதற்காக செந்நிற சாயத்தைப் பயன்படுத்துவதாக ஊடகங்களில் பலதடவை செய்திகள் வெளிவந்துள்ளன. சிவப்பு அரிசிக்கு சந்தையில் மவுசு அதிகம். அதன் விலையும் அதிகம். எனவே வெள்ளை அரிசியை சிவப்பு அரிசியாக மாற்றுகின்ற மோசடி இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அரசிக்குச் சாயம் இடுவதென்றால் அதன் பாதிப்பு மனித உடலில் எத்தனை மோசமாக இருக்குமென்பதை கூறத் தேவையில்லை. சாயம் என்பது இரசாயனம் கலந்த பொருள் என்பதை மறந்து விடலாகாது. எமது உடலின் அத்தனை உறுப்புகளையும் பாதிக்கின்ற இரசாயனப் பதார்த்தங்களையே நாம் எமது அன்றாட உணவின் வாயிலாக உள்ளெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

சில தினங்களுக்கு முன்னர் ஊடகமொன்றில் மற்றொரு திடுக்கிடும் செய்தியொன்று வெளியாகியிருந்தது. வெள்ளைச் சீனிக்கு சாயம் கலந்து பிறவுண் சீனியென்று கூறி விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆகவே கடைகளில் சீனி வாங்குகின்ற போது நுகர்வோர் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமென்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நச்சு இரசாயனங்கள் மனிதருக்கு மாத்திரமன்றி, எம்மைச் சூழவுள்ள பிராணிகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தரைச்சூழல், நீர்ச்சூழல், வளிமண்டலம் ஆகிய அனைத்துக்குமே நச்சுப் பொருட்கள் பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நச்சுப் பொருட்களின் பாவனையானது அதிகரித்துச் செல்வதனால் அதனால் உண்டாகின்ற பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

நாம் இன்று பயன்படுத்துகின்ற உணவுப் பொருட்கள் அனைத்திலுமே நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் இரண்டறக் கலந்து விட்டன. தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், உபஉணவுப் பொருட்கள், மென்பானங்கள், பொதி செய்யப்பட்ட உணவுகள் என்றெல்லாம் எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும், நஞ்சற்ற உணவைக் காண்பதே அரிதாகி விட்டது.

அனைத்துப் பயிர்களுக்கும் இடப்படுகின்ற பசளைகளில் நச்சு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன. பயிர்களுக்கு விசிறப்படுகின்ற பீடைநாசினிகள் அனைத்துமே கொடிய நச்சுப் பதார்த்தங்கள் ஆகும். உணவுப் பொருட்களை பழுதடையாமல் வைத்திருப்பதற்காக இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்களைப் பழுக்க வைப்பதற்காக இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது.

எமது அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனத்தைத் தவிர்ப்பதென்பது இலகுவான காரியமல்ல. சுருங்கச் சொல்வதாயின் நச்சு இரசாயனங்களுக்கு நாம் பழகிப் போய் விட்டோமென்பதே உண்மை.

எமது அன்றாட உணவுகளே இக்காலத்தில் விஷமாகிப் போயுள்ளன. கடைகளில் விற்கப்படுகின்ற எந்தவொரு பீடைநாசினியையோ அல்லது உரவகைகளையோ விவசாயிகள் தடையின்றி வாங்கிப் பயன்படுத்துகின்ற நிலைமை ஆரோக்கியமானதல்ல. அதேபோன்று உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் அவ்வாறுதான் தாராளமாக இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் அன்றாடம் உண்கின்ற அத்தனை உணவுகளுமே இன்று நஞ்சாகிப் போய் விட்டன. இவ்வாறான ஆபத்து தொடர்வதற்கு இனிமேலும் இடமளிக்கக் கூடாது. உணவில் நச்சுப் பதார்த்தங்கள் கலப்பதைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் காண்பதில் நாடு இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT