மீண்டும் மணலாறு அச்சம்! | தினகரன்

மீண்டும் மணலாறு அச்சம்!

மணலாறு பிரதேசத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றும் முனைப்புகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் இப்போது மிரண்டு போயிருக்கிறார்கள்!

அதாவது கடந்த கால அரசாங்கங்கள் திரைமறைவில் கடைப்பிடித்து வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றக் கொள்கையை இன்றைய அரசாங்கமும் முன்னெடுக்கப் போகின்றது என்பதே தமிழ் மக்களின் இன்றைய அச்சம்.

‘திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்’ என்பதற்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமையன்று முல்லைத்தீவு பிரதேசத்தில் பரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் அமைப்புகளெல்லாம் இந்த விடயத்தில் ஒரே கொள்கையின் கீழ் நின்று திட்டமிட்ட குடியேற்றத்துக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. அன்றைய தினம் பெருமளவு மக்கள் அங்கு ஒன்றுதிரண்டு தங்களது உணர்வுகளை அரசுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மணலாறு குடியேற்றம் என்பது இன்று நேற்று உருவான திட்டம் அல்ல. 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே பெரும்பான்மையின அரசியல்வாதிகள் மத்தியில் இத்திட்டம் தோற்றம் பெற்று விட்டது எனலாம். ஆயினும் மணலாறு குடியேற்றம் முனைப்புப் பெறத் தொடங்கியது 1977 காலப் பகுதியில் ஆகும். 1977 தேர்தல் மூலம் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம், மகாவலி அபிவிருத்தி என்பதன் பேரில் மணலாறு பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றுவதற்கு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டது.

‘மணலாறு’ என்ற தமிழ்ப் பதம் ‘வெலிஓயா’ என்று மாற்றம் பெறலாயிற்று. மகாவலி நீரை வட பகுதிக்குக் கொண்டு செல்வதோ அல்லது அப்பிரதேசத்தை வளமுள்ள இடமாக அபிவிருத்தி செய்வதோ அன்றைய அரசின் திட்டமாக இருக்கவில்லை.

‘வெலிஓயா’ என்ற சிங்களப் பிரதேசமொன்றை உருவாக்குவதே அன்றைய அரசின் மறைமுகத் திட்டம்! இத்திட்டத்தின் கீழ் பேரினவாதிகள் இலாபம் பெறக்கூடியதாக பல விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

மணலாறு என்று காலம் காலமாக தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்ற இடமானது முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இடையிலான கரையோரப் பிரதேசத்தை அண்டியபடி அமைந்திருக்கின்றது. அதாவது வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும்படியான ஒரு நிலப்பிரதேசமாக மணலாறு அமைந்திருக்கின்றது.

அங்கு பெரும்பான்மை மக்களைக் குடியேற்றி, சிங்களப் பிரதேசமொன்றை உருவாக்குவதன் மூலம் பேரினவாதிகளுக்கு முக்கிய அனுகூலமொன்று கிடைக்கின்றது.

வடக்கும் கிழக்கும் நிலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை வெலிஓயா குடியேற்றம் மூலம் துண்டித்து விட முடியும். இதன் ஊடாக ‘வடக்கு, கிழக்கு இணைப்பு’ என்ற நீண்ட காலக் கோரிக்கை வலுவிழந்து போகக் கூடும்.

அதுமாத்திரமன்றி வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலப்பிரதேசம் அல்ல என்றும் நிரூபித்துக் காட்ட வழியேற்படுகின்றது. இவ்வாறான தந்திரோபாய நோக்கத்துடனேயே வெலிஓயா குடியேற்றம் மீது கடந்த கால அரசாங்கங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தீவிரம் காட்டி வந்துள்ளன.

மணலாறில் பெருமளவு சிங்கள மக்களைக் குடியேற்றுவதுடன், அயலில் உள்ள தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றிரண்டையும் இணைத்து தனியான மாவட்டமொன்றை உருவாக்கிக் கொள்ளும் திட்டத்தையும் ஜே.ஆரின் அரசாங்கம் கொண்டிருந்ததாக அன்றைய காலப் பகுதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

காலத்துக்குக் காலம் அரசாங்கங்கள் மாற்றமடைகின்ற போதெல்லாம் மணலாறு குடியேற்ற விவகாரமும் மேலெழுந்தவரியாகப் பேசப்படுவதுண்டு.எனினும் திட்டமிட்டபடி எந்தவொரு அரசாங்கத்தினாலும் வெலிஓயா குடியேற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவே முடியாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் மீதான அச்சம் ஆகும்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றதில் இருந்து எல்லைப் பகுதிகள் மீதான தாக்குதல் என்பது அவ்வியக்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரதானமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. திட்டமிட்ட குடியேற்றம் எதுவுமே தமிழ்ப் பிரதேச எல்லைகளுக்குள் வந்துவிடக் கூடாதென்பதில் புலிகள் மிகக் கவனமாகவே இருந்து வந்தனர்.புலிகளின் எல்லைக் கிராமத் தாக்குதலினாலும், பதில் தாக்குதலினாலும் அழிந்து போன அப்பாவி உயிர்கள் ஏராளம்.புலிகளின் தாக்குதல் அச்சமே வெலிஓயா குடியேற்றத்தையும் நிறைவேறாமல் தடுத்து வந்தது.

ஆனாலும் மணலாறு விவகாரம் மீண்டும் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மகாவலிநீரை வன்னி பிரதேசத்தின் ஊடாக கொண்டுசெல்லும் திட்டத்தின் பேரில் மணலாறு பகுதியில் பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றும் மறைமுகத் திட்டமொன்றை அரசாங்கம் கொண்டிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்.இந்த அச்சம் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களை கலவரப்படுத்தியிருக்கிறது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்களாகப் போன்ற போதிலும், தமிழ் மக்களின் அச்சம் இன்னுமே நீங்கியபாடாக இல்லை. தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டதாக அன்றைய அரசாங்கம் மாத்திரமன்றி இன்றைய அரசாங்கமும் கூறுகின்ற போதிலும் யதார்த்த நிலைமை அதுவல்ல!

மூன்று தசாப்த கால யுத்தத்தின் கொடுமைகளை மாத்திரமே அரசியல்வாதிகள் இன்னும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் யுத்தத்தின் பின்னரான இந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் தமிழினத்தின் மனக்குறைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகளென்று எவற்றைத்தான் கூறுவது?

அபகரிக்கப்பட்ட வாழ்விடங்களை மீளப் பெறுவது, அரசியல்கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்றெல்லாம் தமிழ் மக்கள் இன்னுமே போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறான நிலையில்தான் புதிதாக முளைத்திருக்கிறது மணலாறு குடியேற்ற அச்சம்!

வெலிஓயா குடியேற்றத் திட்டமென்ற யோசனையே தங்களுக்குக் கிடையாதென அரசு அடித்துக் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் நம்பும்படியாக அரசு தனது வெளிப்படைத் தன்மையை உறுதியாகக் காண்பிப்பதுதான் மக்களின் அச்சத்தைத் தணிக்க உதவும்.


Add new comment

Or log in with...