Saturday, April 27, 2024
Home » இஸ்லாத்தின் பார்வையில் கணவன், மனைவி உறவு

இஸ்லாத்தின் பார்வையில் கணவன், மனைவி உறவு

by sachintha
November 17, 2023 11:48 am 0 comment

‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளார். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நிமிர்த்திக் கொண்டே போனால் ஒடிந்து விடுவாய். அதை நீ அப்படியே விட்டு விட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்-: அல்ஹதீஸ்)

மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்க மாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என நாம் நினைக்கும் முறையில் அவளை திருத்திவிட முயலக்கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக்கூடாது, அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போன்றதாகும். அப்படி நினைத்துச் செயல்பட்டால் அது அந்த எலும்புகளை முறித்துவிடுவதில் தான் போய் நிற்கும்.

நபி (ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலையையும் இயற்கை பண்புகளையும் ஆழமாக விளக்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம் தமது மனைவியின் குறைகளைச் சகித்துக் கொள்வார். அவர்களது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவர்களது இல்லற வாழ்வு சண்டை, சச்சரவு, வாக்குவாதம் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாக திகழும்.

நபி (ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாக அமைத்துச் செயல்படுவதே உண்மை முஸ்லிமின் பண்பாகும்.

இஸ்லாத்தில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ, இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பண்புகளினால் தனது மனைவியிடம் காணப்படும் குறைகளை சகித்து அவற்றை மாற்றிக்கொள்ள பண்பாட்டுடன் நடக்க முயற்சிக்க துணையாக அமையும்.

தொகுப்பு: உம்மு பாத்திமா அஸ்கா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT