அரசைக்கவிழ்ப்பதே ஒன்றிணைந்த எதிரணியின் நோக்கம் | தினகரன்

அரசைக்கவிழ்ப்பதே ஒன்றிணைந்த எதிரணியின் நோக்கம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலியாக விரும்பவில் லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பிரதமருக்கு எதிராக விசேடமான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. குற்றச்சாட்டுக்களுக்கு உரிய சாட்சியங்கள் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையிலுள்ள விடயங்கள் நம்பகத் தன்மையைக் கொண்டதாக அமையவில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் முதல் பாதியில் போதியளவு வினைத்திறனை வெளிக் காட்டா மையால் புதிய கட்சியாக உருவான பொதுஜன பெரமுனை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் இரு பிரதான கட்சிகளையும் விட அதிக வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. எஞ்சிய இரண்டரை வருடத்தில் அரசாங்கம் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டினால் மக்களின் நிலைப்பாட்டை மாற்ற முடியும். துரதிஷ்டவசமான பொதுஜன பெரமுன இது நடைபெறுவதை விரும்பவில்லை. இவர்கள் தற்பொழுது பிரதமரை அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். அடுத்த இலக்கு ஜனாதிபதி.

ஜனாதிபதியையும் அகற்றிய பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கமாகும்.

எனினும், 2015 ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். இவ்வாறான சூழலில் நாம் எப்படி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக் முடியும்?

குறிப்பாக திறைசேரி பிணை முறி மோசடி தொடர்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், விசேடமாக பிரதமர் பற்றி எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. பொதுஜன பெரமுன தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையி ல்லாப் பிரேரணை பிணைமுறி மோசடியை அடிப்படையாகக் கொண்டு பக்கச்சார் பானது. எனவே தீங்கிளைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள, தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிரேரணைக்கு நாம் பலியாகக் கூடாது.

மக்கள் ஆணையிலுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு பிரமருக்கும், ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சந்திரிகா, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கங்களில் அங்கம் வகித்தவர்கள்.

இலங்கை பாதுகாப்பு ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்து சமுத்திரத்தில் மிகவும் முக்கியமான இடத்திலமைந்துள்ளது. எனவே, இலங்கை யிலுள்ள சகலரும் சமமாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...