பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் நான்காயிரம் வீடுகள் | தினகரன்

பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் நான்காயிரம் வீடுகள்

இலங்கை மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளில் சமூகநீதியை ஏற்படுத்தி வளங்கள் சமமாகப் பகிரப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது முக்கிய இலக்காகக் காணப்படுகிறது.

இலங்கையில் நீண்ட காலமாக கவனம் செலுத்தப்படாத இந்திய வம்சாவளித் தமிழ் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக அண்மைக் காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு ஆட்சியினாலும் மேற்கொள்ளப்படாத பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையை வழங்கி பிரஜாவுரிமையை வழங்குவதற்கு ஜே.ஆர். ஜயவர்தன மேற்கொண்ட நடவடிக்கையின் பின்பு அவர்களின் வாழ்வினை முன்னேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே அதிக அபிவிருத்தி செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்பட்ட லயன் அறைகளுக்குப் பதிலாக வீடு மற்றும் காணிக்கான உரிமையை வழங்கும் வேவைலத்திட்டம் இங்கு முக்கியமானதாகும். 550 சதுர அடி வீடொன்று அல்லது 7 பேர்ச்சஸ் காணியொன்றுக்கான உரிமை கொண்ட உரித்துக்களை வழங்கி செயற்படுத்தி 'ஹரித ரன்' வீடமைப்புத் திட்டம் மற்றும் 'ஹரித ரன் உரித்து வழங்கல்' என்பன நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, காலி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்விற்கு பெறுமதி சேர்த்தன.

பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக 5 வருட தேசிய திட்டமொன்று 2016 மார்ச் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் வறுமையுடன் முக்கியமாக இணைந்து காணப்பட்ட சுகாதாரம், போசணை, கல்வி, முன்பருவக் கல்வி அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, பெண்கள் மற்றும் யுவதிகளை வலுவூட்டல், வீடு, குடிநீர், உடநலப் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்தி பெருந்தோட்ட மக்களின் சமூக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது இந்த 5 வருடத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

லயன் அறைகளில் வாழும் 172,700 குடும்பங்களுக்கு 1,890 வீட்டு அலகுகள் 2016 ஆம் ஆண்டு முடிவடையும் போது கையளிக்கப்பட்டுள்ளன. புதிய கிராமங்கள் எண்ணக்கருவின் கீழ் 'ஆகரபதன', 'ஹூட்வில்' தோட்டப்பகுதியில் 115 வீடுகளையும், பொவந்தலாவை, கொடியாகல தோட்டப்பகுதியில் 184 வீடுகளையும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடனும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

சுமார் 200 வருட காலமாக லயன் அறைகளில் வாழ்ந்த இந்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டிலும் 2,551 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வரவு செலவுத் திட்டம் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்காக 2000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்திய அரசின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்காக மேலும் 4000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு முடிவடையும்போது 5000 வீடுகளை நிர்மாணித்து மக்களிடம் ஒப்படைக்க புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சு எதிர்பார்ப்பதுடன், 2020 ஆம் ஆண்டாகும்போது பெருந்தோட்டப் பகுதியில் 50,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கிறது.

'எமக்கே உரித்தான ஓர் காணி, எமக்கே உரித்தான ஓர் வீடு' என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் விசேட கருத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கரங்களினால் நுவரெலியா ஹூட்வில் தோட்டப்பகுதியில் வீட்டுப் பயனாளிகளுக்கு உரித்து வழங்குவதுடன் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மாத்தறை ஹூலந்தாவ தோட்டப்பகுதியில் செயற்படுத்தப்பட்டது.

வரலாற்றில் முதற் தடவையாக சிக்கலற்ற 2864 உரித்துக்களைப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கி, அதன் மூன்றாம் கட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஹற்றன், டன்பார் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வேலைத் திட்டம் ஏனைய மாவட்டங்களில் வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கூட காணப்படவில்லை. இந்த சிக்கலற்ற உரித்துக்கள் கிடைத்தமை மூலம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதுடன், அனைவருக்கும் உரித்தான சலுகை கிடைத்தமை ஊடாக சமூக நீதி உறுதிப்படுத்தப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக 200 வருடங்கள் பழைமை வாய்ந்த லயன் அறை வரிசைகளைப் புனரமைத்து புதிதாக கூரைத் தகடுகள் பொருத்துவதற்கு 81 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக 1605 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

பல நீர் ஊற்றுக்கள் மலைநாட்டுப் பிரதேசத்தில் ஆரம்பித்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு மிக்க குடிநீரைப் பெற்றுக் கொள்வது மலைநாட்டு மக்களுக்கு ஓர் சவாலாகும். பெருந்தோட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக தற்போது 50 நீர் வழங்கல் திட்டங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. உலக வங்கி உதவியின் கீழ் 15800 குடும்பங்களை இலக்காகக் கொண்டு 130 நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் போசனை மட்டத்தை மேம்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் 1.8 பில்லியன் ரூபாய் அமைச்சு ஊடாக வழங்கப்பட்டுள்ளது. உடநலப் பாதுகாப்பு வசதிகளுக்காக 45 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக 1242 குடும்பங்களுக்கு உடநலப் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக வங்கி உதவியின் கீழ் தற்போது 7300 குடும்பங்களுக்கு உடநலப் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நுழைவு வீதிகளுக்கு தார் இடுதல், கொங்கிரீட் இடுதல், பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணித்தல், விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், கலாசார மத்திய நிலையங்களை மேம்படுத்தல் என்பவற்றுக்கு 198 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தோட்டப்புறத்தின் பல வீதிகளுக்கு காபட் இடவும், பாலங்களை நிர்மாணிக்கவும் இயலுமாக காணப்பட்டது.

பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளை வலுவூட்டுவதற்காக சுயதொழில் கடன் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டது. ஹற்றனில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி மத்திய நிலையம், ரன்பொடவில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையம் என்பன பெருந்தோட்ட மக்களுக்காக அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த காலத்தில் செயற்படுத்தப்பட்ட விசேட வேலைத்திட்டங்களாகும்.

பெருந்தோட்ட பிள்ளைகளின் அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனத்தினைச் செலுத்தி முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கு 5 வருடத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 10 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் 140 புதிய சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அதேபோன்று நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச சபைகளின் எண்ணிக்கை 5 இலிருந்து 12 வரை அதிகரித்தமை ஊடாக பிரதேச ஆட்சியை மேலும் இலகுபடுத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன் ஊடாக பாரிய பிரதேசத்தில் அல்லாது சிறிய பிரதேசமொன்றினுள் மக்கள் பிரதிநிதித்துவத்துடன் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள, தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய நுவரெலியா மாவட்ட மக்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் இந்தப் பாரிய அபிவிருத்திச் செயற்பாட்டை கிராம மட்டத்தில் செயற்படுத்த முடியுமானதோர் குழுவினருக்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை வழங்குவது தொடர்பாகத் தீர்மானிக்க வேண்டும். தோற்கடிக்கப்பட்ட சக்திகள் கடந்த காலத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களைத் தமது குடும்பங்களைப் பலப்படுத்துவதற்கான கொமிஸ் அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாத்திரமே பயன்படுத்தின.

 இல்லாவிடின் மோசடியான செயற்பாடுகளில் ஈடுபட்டு பீதியை ஏற்படுத்தி, கொலை செய்து, பெண் துஷ்பிரயோக விழாக்களை நடாத்திக் கொண்டு பழங்குடி மிலேச்சத்தனமுடைய மனிதர்களாக அவர்கள் நாட்டில் செயற்பட்டனர். இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் அவ்வாறான சக்திகள் எந்த வேடத்தில் வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். ஒரே கட்சி எனக் கூறிக் கொண்டாலும் பிரிந்து பிளவுபட்டு பல்வேறு கருத்து வேறுபாட்டுச் சிக்கல்களில் மூழ்கியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்தும் மக்களுக்கு வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் செயற்படுத்த வேண்டியுள்ளமையினால் உலகம் பயணிக்கும் பாதையை இனங்கண்ட, மாற்றமடையும் சவால்களுக்கு முன்பாக மாற்றமடையும் ஒரே கொள்கையின் அடிப்படையில் செயற்படும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிராமத்தின் அதிகாரத்தை வழங்க வேண்டியுள்ளது.

பழனி திகாம்பரம்
மலைநாட்டு புதிய கிராமங்கள்,
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்
சமூக அபிவிருத்தி அமைச்சர்


Add new comment

Or log in with...