Saturday, April 27, 2024
Home » உல்லாசப்பயணிகளால் நிரம்பி வழியும் அறுகம்பை பிரதேசம்

உல்லாசப்பயணிகளால் நிரம்பி வழியும் அறுகம்பை பிரதேசம்

by damith
November 6, 2023 11:58 am 0 comment

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்திற்கு பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில் தனக்கென தனியோர் இடத்தினைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பை கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால், தினமும் இப்பிரதேசத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த இப்பிரதேச சுற்றுலாத்துறை தற்போது மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தில் விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன. இதனால் பெருந்தொகை அந்நிய செலாவணி நமது நாட்டுக்கு வருமானமாய் கிட்டி வருகின்றது.

இங்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்கெனவும் பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர். இதனால் அறுகம்பை பிரதேசத்தில் ஏராளமான உலகத் தரம் மிக்க நட்சத்திர விடுதிகளும், ஹோட்டல்களும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.

உல்லாசபுரியின் பூமியாகத் திகழும் அறுகம்பை கடற்பகுதியானது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு வசந்தமாக இருந்து வருவதோடு, இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்திற்கும் துணைநிற்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இங்கு கடற்றொழில் மேற்கொள்பவர்கள் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான ரூபாவை ஈட்டிக் கொள்வதற்கும் இக்கடல் வளம் பெரிதும் அம்மக்களுக்கு துணை நிற்கின்றது.

இக்கடற்கரைப் பிரதேசதம் உலகரங்கில் மிகப் பிரபல்யம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருவது குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாக உள்ளது.

சர்வதேச ரீதியிலான நீரலைச் சறுக்கு விளையாட்டு இக்கடற்பரப்பில் வருடந்தோறும் இடம்பெறுவதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிரதேசத்திற்கு வருகை தருகின்றனர். இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கும் வழியேற்படுகின்றது. அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் இன மத பேதங்கள் மறந்து இப்பிரதேச கடற்கரைக்கு வருகை தருவதனால் இனஒற்றுமைக்கும் அறுகம்பை கடற்கரைப் பகுதி துணை நிற்கின்றது.

அமைதியான சூழல், அழகான அமைவிடம், மனதிற்கு மசிழ்ச்சியினை ஏற்படுத்தும் இரம்யமான சுவாத்தியம் போன்றவற்றைக் கொண்டுள்ள பொத்துவில் அறுகம்பை கடற்கரைக்கு தினமும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

எம்.ஏ.றமீஸ், (அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT